

பாக்தாத்,
ஈராக் நாட்டில் அன்பார் மாகாணத்தின் மேற்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் உள்ள பகுதிகளை மீட்டெடுப்பதற்காக ராணுவம் கடும் சண்டையில் ஈடுபட்டு வருகிறது.இந்த நிலையில் அங்கு அல் அவானி, வடக்கு ஜிபாப், அல் ஜல்லா கிராமங்களை ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து ஈராக் படையின் ஜசீரா நடவடிக்கைகள் கட்டளை பிரிவு நேற்று முன்தினம் மீட்டுள்ளது.
இதற்காக நடந்த சண்டையின்போது 25 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அந்தப் பகுதியில் படைகள் மேலும் முன்னேறி வருவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன.
இதற்கிடையே கிர்குக் நகருக்கு தென்மேற்கில், அல் பக்காரா கிராமத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டு, மொத்தமாக புதைக்கப்பட்ட 50 ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரின் ராட்சத புதை குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதைகுழியில் இருந்து உடல்களை எடுத்து பரிசோதிக்க சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த தகவல்களை ஈராக் ராணுவ அமைச்சகத்தின் போர் ஊடக பிரிவு உறுதி செய்துள்ளது.