பாகிஸ்தானில் அனல்காற்றுக்கு 15 பேர் பலி

பாகிஸ்தானில் வீசிய அனல் காற்றுக்கு, மசூதி விழாவில் கலந்துகொண்ட 15 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் அனல்காற்றுக்கு 15 பேர் பலி
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தின் தலைநகர் பெஷாவரில் கடந்த சில தினங்களாக கடுமையான வெப்பம் நிலவுகிறது. அங்கு அனல் காற்று வீசி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெஷாவர் நகரில் ஷேவான் என்ற இடத்தில் உள்ள லால் ஷாபாஸ் குவாலந்தர் மசூதியில் வருடாந்திர விழா தொடங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் மிக விமரிசையாக நடைபெறும் இந்த விழாவில் கலந்துகொள்ள பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் இருந்தும், பிறநாடுகளில் இருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் வருவது வழக்கம்.

சிறப்பு வழிபாடு

அந்த வகையில் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் லால் ஷாபாஸ் குவாலந்தர் மசூதியில் குவிந்துள்ளனர். அவர்கள் தினந்தோறும் மசூதியில் நடக்கும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு தொழுகையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆனால் விழாவில் கலந்துகொண்டிருக்கும் மக்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எதையும் மாகாண அரசு சரிவர செய்யவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது.

குறிப்பாக வெயிலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான முன்ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விழாவுக்கு வரும் மக்கள் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

15 பேர் பலி

இந்த நிலையில், லால் ஷாபாஸ் குவாலந்தர் மசூதியில் கடும் அனல் காற்று வீசியதன் காரணமாக விழாவில் கலந்துகொண்ட பலர் சுருண்டு விழுந்து இறந்தனர்.

இப்படி கடந்த 4 நாட்களில் மட்டும் 15 பேர் உயிர் இழந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

பெஷாவர் நகரின் அனைத்து பகுதிகளிலும் அடுத்த சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்றும், எனவே மக்கள் விழிப்புடன் இருக்கும் படியும் வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com