

குவாகதவுகவ்,
ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள குட்டி நாடான பர்கினா பாசோவில், ஏராளமான தங்கச்சுரங்கங்கள் உள்ளன. இந்த சுரங்கங்களில் இந்தியா உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்தவகையில், நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ள இனாட்டா சுரங்கத்தில் ஏராளமான வெளிநாட்டு தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
இந்த சுரங்கத்தில் இருந்து பணிமுடித்து தொழிலாளர்கள் வெளியே வந்து கொண்டிருந்த போது, திடீரென பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் அங்கு வந்தது. அவர்கள் இந்தியா, தென் ஆப்பிரிக்கா நாடுகளை சேர்ந்த இருவர் உள்பட 3 தொழிலாளர்களை கடத்தி சென்றனர்.
இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. அவர்கள் கடத்தப்பட்ட 3 தொழிலாளர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பல்வேறு பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள பர்கினா பாசோவில், வெளிநாட்டினர் கடத்தப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. இதில் ஏராளமான ஜிகாதி குழுக்களை சேர்ந்த பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே இந்த கடத்தலிலும், அந்த பயங்கரவாதிகளின் சதி இருக்கக்கூடும் என தெரிகிறது.