

கொழும்பு,
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு போதிய அளவில் இல்லாத நெருக்கடி நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், இறக்குமதியான எரிபொருளை வாங்க கூட போதிய பணம் இல்லாத சூழல் உள்ளது.
இலங்கை அரசின் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேசன் (சி.பி.சி.) கடந்த வாரம், வெளிநாடுகளில் இருந்து வரும் எரிபொருட்களை கொள்முதல் செய்வதற்கு வேண்டிய நிதியில்லை என வேதனை தெரிவித்து இருந்தது.
கடந்த 2021ம் ஆண்டு, நிலையான டீசல் விற்பனை விலையை அரசு நிர்ணயித்து அறிவித்தது. இதனால், ரூ.2,900 கோடி அளவுக்கு சி.பி.சி.க்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், அந்நாட்டின் ஆற்றல் துறை மந்திரி உதய கம்மனபிலா இன்று கூறும்போது, இன்றைக்கு எரிபொருட்கள் இறக்குமதியாகி உள்ளன.
ஆனால், அதனை விலை கொடுத்து வாங்க போதிய நிதிவசதி எங்களிடம் இல்லை என கூறியுள்ளார். அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடியால், நாட்டில் ஏற்படவுள்ள எரிபொருள் பற்றாக்குறை தீவிர நிலையை பற்றி கடந்த ஜனவரியில் 2 முறையும் மற்றும் இந்த மாத தொடக்கத்தில் ஒரு முறையும் எச்சரிக்கை விடுத்து இருந்தேன் என்று அவர் கூறியுள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறையால், அந்நாடு முழுவதும் பெட்ரோல் பம்புகளில் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால், எரிபொருளின் சில்லரை விற்பனை விலையை உயர்த்துவதே இந்த குழப்ப சூழலில் இருந்து விடுபட முடியும் என்றும் கம்மனபிலா தெரிவித்து உள்ளார்.