அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை அதிகரிப்பு

அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமான சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.
அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை அதிகரிப்பு
Published on

துபாய்,

அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் துபாயில் இருந்து இந்தியாவுக்கு இயக்கப்படும் விமான சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது.

இது குறித்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

துபாயில் இருந்து சென்னை, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட 9 நகரங்களுக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் தனது நேரடி விமான சேவையை இயக்கி வருகிறது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக விமான போக்குவரத்து குறைவாக இயக்கப்பட்டன.

தற்போது அமீரகம், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், விமான சேவை முன்பு இருந்தது போல் இயல்பான நிலையில் இயக்கப்படும். இதன் மூலம் துபாயில் இருந்து 9 இந்திய நகரங்களுக்கு வாரத்துக்கு 170 விமானங்கள் இயக்கப்படும். இந்த சேவைகள் அனைத்தும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந் தேதி முதல் தொடங்கும்.

இதில் சென்னை நகரத்துக்கு மட்டும் வாரத்துக்கு 21 விமானங்கள் இயக்கப்படும். இதன் மூலம் சென்னை நகரத்துக்கு எமிரேட்ஸ் விமானம் தினமும் 3 விமானங்களை மீண்டும் வழக்கம் போல் இயக்கும். மும்பைக்கு 35 விமானங்களும், டெல்லிக்கு 28 விமானங்களும், பெங்களூருவுக்கு 24 விமானங்களும், ஐதராபாத்துக்கு 21 விமானங்களும், கொச்சிக்கு 14 விமானங்களும், கொல்கத்தாவுக்கு 11 விமானங்களும், ஆமதாபாத்துக்கு 9 விமானங்களும், திருவனந்தபுரத்துக்கு 7 விமானங்களும் வாரம் ஒன்றுக்கு இயக்கப்படும்.

பயணிகள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப பயணம் செய்யும் வகையில் முன்பதிவு செய்யும் முறையிலும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. துபாயிலிருந்து மும்பை நகருக்கு ஏ380 விமானம் இந்த மாதம் முதல் தினசரி இயக்கப்படுகிறது. அதேபோல் இ.கே.500/501 விமான சேவை 2 அடுக்கு வசதி கொண்டது ஆகும்.

முதல் மற்றும் வர்த்தக வகுப்பில் பயணம் செய்யும் பயணிகள் சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் போது விமான நிலையத்தில் இருந்து தங்களின் இருப்பிடங்களுக்கு செல்ல சொகுசு கார் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எமிரேட்ஸ் ஸ்கைவர்டு உறுப்பினர்கள் துபாய் உள்ளிட்ட விமான நிலையங்களில் சொகுசு ஓய்விடங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயிலிருந்து சென்னை உள்ளிட்ட 9 இந்திய நகரங்களுக்கு எமிரேட்ஸ் விமான நிறுவனம் மீண்டும் தனது வழக்கமான சேவையை வழங்க இருப்பதால் விமான பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com