நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்துக்கு இந்தியா மீண்டும் நிதியுதவி

கோப்புப்படம்
மோசமான வானிலை காரணமாக, சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.
கொழும்பு,
தமிழ்நாட்டின் நாகைக்கும், இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையே 'சிவகங்கை' என்ற பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. மோசமான வானிலை காரணமாக, சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து, சமீபத்தில் மீண்டும் தொடங்கியது.
வாரத்தில் 6 நாட்கள், இந்த கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. கப்பலை இயக்குவதற்கான செலவுகள், தளவாட செலவுகள் ஆகியவற்றை பகிர்ந்து கொள்வதன் மூலம், பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கப்பல் போக்குவரத்து கிடைப்பதை உறுதி செய்வதற்காக, இந்தியா நிதியுதவி செய்து வருகிறது.
முந்தைய ஆண்டுகளை போலவே, மேலும் ஓராண்டு இலங்கை பணத்தில் 30 கோடி நிதியுதவி வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இத்தகவலை இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், "பிராந்திய தொடர்பை அதிகரித்தல், மக்களுக்கும், மக்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்தியா உறுதி பூண்டிருப்பதால், இந்த நிதியுதவி அளிக்கிறது.
கப்பல் போக்குவரத்து தொடங்கியதில் இருந்து 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதன்மூலம் இரு நாடுகளிடையே கலாசார, பொருளாதார, சமூக பரிமாற்றம் வலுவடைந்துள்ளது. இந்தியா-இலங்கை இடையிலான கடல்சார் இணைப்புக்கு புத்துயிரூட்டுவதில் கப்பல் போக்குவரத்து, ஒரு மைல்கல்லாக திகழ்கிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






