

வாஷிங்டன்,
அமெரிக்காவை சேர்ந்த வானொலி வர்ணனையாளரும், டிரம்ப் ஆதரவாளருமான மைக்கேல் சாவேஜ் என்பவர், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க குடியுரிமை சட்டங்கள் குறித்து விமர்சித்து பேசினார்.
அப்போது அவர், “அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைக்கு உடனடியாக அமெரிக்க குடியுரிமை கிடைத்து விடுகிறது. இதனால் இந்தியா, சீனா போன்ற பூமியின் நரகக் குழிகளில் இருந்து பலர் அமெரிக்காவில் குடியேறிவிடுகின்றனர்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்களும், சீனர்களும் லேப்டாப் வைத்துள்ள குண்டர்கள். தங்களது மாபியா குடும்பத்துடன் சேர்ந்து அமெரிக்காவை சேதப்படுத்துகின்றனர், வளங்களை சுரண்டுகின்றனர்” என்று பேசியிருந்தார்.
அவரது பேச்சை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த நிலையில், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அமெரிக்க தூதரகம் இது குறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டது. அதில், “இந்தியா ஒரு சிறந்த நாடு எனவும், தனது நல்ல நண்பரின் ஆட்சி அங்கு நடந்து கொண்டிருக்கிறது எனவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவைப் பற்றிய பதிவையும், தொடர்ந்து அமெரிக்க தூதரகம் வெளியிட்ட விளக்கத்தையும் நாங்கள் அறிந்துள்ளோம். அந்த விமர்சனங்கள் பொருத்தமற்றதாகவும், தரம் தாழ்ந்ததாகவும் உள்ளன. பரஸ்பர மரியாதை மற்றும் பொது நலன்களின் அடிப்படையில் அமைந்த இந்தியா-அமெரிக்கா உறவின் யதார்த்தத்தை அந்த விமர்சனம் நிச்சயமாகப் பிரதிபலிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.