எல்லையில் படைகள் வாபஸ் விவகாரம்: இந்தியா-சீனா இடையேயான ஆலோசனை நிறைவு

சீனாவின் பீஜிங் நகரில் இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தைக்கான 29-வது கூட்டம் நடந்து முடிந்துள்ளது.
எல்லையில் படைகள் வாபஸ் விவகாரம்: இந்தியா-சீனா இடையேயான ஆலோசனை நிறைவு
Published on

பீஜிங்,

லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி ஊடுருவியதன் தொடர்ச்சியாக, இருதரப்பு ராணுவத்துக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனால் எல்லையில் இரு தரப்பு நாடுகளும் படைகளை குவித்தன. எல்லை பகுதியில் பதற்றமும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அமைதியை நிலைநாட்டுவதற்காக இருதரப்பும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன.

இருதரப்பும் படிப்படியாக படைகளை விலக்குவது எனவும், எல்லையில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவது என்றும் முடிவு மேற்கொள்ளப்பட்டது. இரு தரப்பிலும் ராணுவம் மற்றும் தூதரக மட்டத்தில் தொடர் பேச்சுவார்த்தைகள் நடந்தன.

இதன்படி, இந்தியா-சீனா இடையேயான எல்லை விவகாரம் பற்றிய 28-வது கூட்டம் கடந்த ஆண்டு நவம்பர் 30-ந்தேதி நடந்து முடிந்தது. அதில், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவது என்று முடிவானது. இந்த நிலையில் சீனாவின் பீஜிங் நகரில் இந்தியா-சீனா இடையே எல்லை விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தைக்கான இந்த 29-வது கூட்டம் நடந்து நிறைவு பெற்றுள்ளது.

இதில், அசல் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் படைகளை முற்றிலும் வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகள் பற்றிய இரு நாடுகளின் இடையேயான ஆழ்ந்த பார்வைகள் பரிமாறி கொள்ளப்பட்டன. அசல் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் உள்ள மீதமுள்ள விவகாரங்களில் தீர்வு காண்பது பற்றியும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் இணை செயலாளர் (கிழக்காசியா) தலைமையிலான குழுவினர் சென்றனர். இதேபோன்று சீனாவில், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சகத்தின் எல்லை மற்றும் பெருங்கடல் துறைக்கான இயக்குநர் ஜெனரல் தலைமையிலான குழுவினர் சென்றனர். இதனை மத்திய வெளிவிவகார அமைச்சகமும் இன்று உறுதி செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com