அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவோம்; இந்தியாவுக்கு சீனா அழைப்பு


அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவோம்; இந்தியாவுக்கு சீனா அழைப்பு
x
தினத்தந்தி 9 April 2025 6:50 AM IST (Updated: 9 April 2025 3:34 PM IST)
t-max-icont-min-icon

சீனா மீது ஒட்டுமொத்தமாக 104 சதவீத கூடுதல் வரியை அமெரிக்கா விதித்துள்ளது.

பீஜிங்,

அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் இந்தியா, சீனா, உள்பட பல்வேறு நாடுகளுக்கு கூடுதலாக வரி விதித்துள்ளார். இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீத வரி விதித்துள்ளார்.

அதேபோல், சீனப் பொருட்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத வரிகளை மார்ச் மாத துவக்கத்தில் 20 சதவீதமாக டிரம்ப் உயர்த்தினார். அமெரிக்காவிற்குள் பென்டானில்(Fentanyl) உள்ளிட்ட வீரியமிக்க போதை மருந்துகள் கடத்தப்படுவதைத் தடுக்க சீனா போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டி இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டார்.

அதன்பின்னர், பரஸ்பர வரிவிதிப்பு என்ற வகையில் கடந்த வாரம் 34 சதவீத கூடுதல் வரியை விதித்தார். இதன்மூலம் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியானது 54 சதவீதமாக உயர்ந்தது.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த டிரம்ப், சீன இறக்குமதிக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதித்துள்ளார். இதன் மூலம் சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 104 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வரிவிதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால், உலக அளவில் பெரும் வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்க வரிவிதிப்பை எதிர்கொள்ள இணைந்து செயல்படுவோம் என்று இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக சீன தூதரக செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், சீனா-இந்தியா பொருளாதார, வர்த்தக உறவு இருதரப்பு நன்மைகளை அடிப்படையாக கொண்டது. அமெரிக்காவின் வரிவிதிப்பை எதிர்கொள்ளும் உலகின் 2 வளர்ச்சியடைந்த நாடுகள் இணைந்து செயல்பட்டு இந்த கடினமான சூழ்நிலையை கடக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story