

அடிஸ் அபாபா,
ஜோர்டான் நாட்டுக்கான பயணம் முடிந்ததும், பிரதமர் மோடி எத்தியோப்பியாவுக்கு புறப்பட்டு சென்றார். எத்தியோப்பியாவில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இதன்படி அந்நாட்டுக்கு சென்ற அவரை அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி விமான நிலையத்தில் வரவேற்றார். பின்னர் அவரை தன்னுடன் காரில் அழைத்து சென்றார். எத்தியோப்பிய பிரதமர் அபி அகமதுவுடனான சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளும், தகவல் தொடர்பு, பரிமாற்றம் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்துள்ளன.
நம்முடைய இரு நாடுகளின் ஒத்துழைப்பில், பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்பு, தொழில் நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் கட்டமைப்பு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு போன்றவற்றின் முக்கிய அம்சங்களில் விரிவாக கலந்து ஆலோசனை மேற்கொள்வதற்கான ஒரு வாய்ப்பை இன்று நாம் பெற்றுள்ளோம். இந்தியாவில், எத்தியோப்பிய மாணவர்களுக்கான உதவி தொகையை இரட்டிப்பாக்க நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, பன்முக தன்மையில் ஒற்றுமைக்கான அடையாளங்களாக, மொழிவளம் மற்றும் பாரம்பரியங்களை கொண்ட இரு நாடுகளும் உள்ளன. அமைதி மற்றும் மனித இன நலனுக்கான செயல்பாட்டில் ஈடுபடும் ஜனநாயக சக்திகளாக இந்தியாவும் எத்தியோப்பியாவும் உள்ளன என்றும் அவர் கூறினார்.
பிரதமர் மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.. முதல் கட்டத்தில் பிரதமர் மோடி நேற்று ஜோர்டான் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு, அந்நாட்டின் மன்னர் அப்துல்லா-II முன்னிலையில் நடைபெற்ற இந்தியா ஜோர்டான் முதலீட்டாளர் சந்திப்பில் உரையாற்றினார். அதற்கு முன், இந்தியா - ஜோர்டான் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.