தலீபான்களுக்கு இந்தியா தலைமையிலான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டிப்பு..!!

இந்தியா தலைமை வகிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பெண்கள் மீதான அடுக்குமுறைக்காக தலீபான்களை வன்மையாக கண்டித்துள்ளது.
Image Courtacy: ANI
Image Courtacy: ANI
Published on

நியூயார்க்,

ஆப்கானிஸ்தானை கடந்த ஓர் ஆண்டாக ஆட்சி செய்து வரும் தலீபான்கள் பெண்களின் சுதந்திரம் மற்றும் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையிலான கட்டுப்பாடுகளை தொடர்ந்து விதித்து வருகின்றனர். கடுமையான ஆடைக்கட்டுப்பாடு, பூங்காக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்ல தடை, ஆண்கள் துணையின்றி பயணிக்க தடை என பல கட்டுப்பாடுகள் மூலம் பெண்களின் உரிமை நசுக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலவும், தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் கடந்த வாரம் தலீபான்கள் தடை விதித்தனர். இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்த நிலையில் தற்போது இந்தியா தலைமை வகிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பெண்கள் மீதான அடுக்குமுறைக்காக தலீபான்களை வன்மையாக கண்டித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான இந்திய தூதரும், டிசம்பர் மாதத்துக்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவருமான ருச்சிரா கம்போஜ், 15 நாடுகளின் கவுன்சில் சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் பல்கலைக்கழங்களில் நுழைவதற்கும், தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தலீபான்கள் தடைவிதித்ததாக வெளியான செய்திகளால் கவுன்சில் உறுப்பினர் மிகுந்த அச்சம் மற்றும் கவலை அடைந்ததாகவும், இந்த கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை உடனடியாக மாற்றியமைக்க தலீபான்களை வலியுறுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பிரசிடென்சி இந்தியாவின் தற்போதைய தலைமை மற்றும் அதன் 2 வருட பதவிக்காலம் வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com