இந்தியா எந்த நாட்டிடமும் எண்ணைய் வாங்க சுதந்திரம் உண்டு: அமெரிக்காவுக்கு ரஷியா பதிலடி

ரஷியா மட்டுமே இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை வழங்கும் ஒரே நாடு அல்ல
இந்தியா எந்த நாட்டிடமும் எண்ணைய் வாங்க சுதந்திரம் உண்டு: அமெரிக்காவுக்கு ரஷியா பதிலடி
Published on

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியப் பொருட்கள் மீதான வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார்.இதற்கிடையே இந்தியா–அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதால், இந்தியப் பொருட்கள் மீதான வரியை 18 சதவீதமாகக் குறைப்பதாக டிரம்ப் தெரிவித்தார். மேலும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்றும் டிரம்ப் கூறினார். ஆனால் இது தொடர்பாக இந்தியாவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்று ரஷியா தெரிவித்தது. இதற்கிடையே ரஷிய எண்ணெயை இந்தியா வாங்காது என்று வெள்ளை மாளிகை மீண்டும் தெரிவித்தது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ரஷியா கருத்து தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியதாவது:-“இந்தியா எந்த நாட்டிலிருந்தும் எண்ணெய் வாங்க அந்த நாட்டுக்கு முழு சுதந்திரம் உண்டு. கச்சா எண்ணெய் விநியோகஸ்தர்களை பன்முகப்படுத்தும் இந்தியாவின் முடிவில் புதிதாக எதுவும் இல்லை. ரஷியா மட்டுமே இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை வழங்கும் ஒரே நாடு அல்ல. அப்படி ஒருபோதும் இருந்ததும் இல்லை. இந்தியா எப்போதும் இந்தப் பொருட்களை மற்ற நாடுகளிலிருந்து வாங்கி வருகிறது. எனவே இதில் புதிதாக எதையும் நாங்கள் காணவில்லை” என்றார்.

அதேபோல் ரஷிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா கூறும் போது, “ஹைட்ரோகார்பன் வர்த்தகம் இரு தரப்பினருக்கும் நன்மை பயக்கும். இரு நாடுகளும் சர்வதேச எரிசக்தி சந்தையில் ஸ்திரத்தன்மையை பராமரிக்க பங்களிக்கின்றன என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். இந்தத் துறையில் இந்தியாவுடன் நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடர ரஷியா தயாராக உள்ளது” என்றார்.

இதற்கிடையே எரிசக்தி நிபுணர் இகோர் யுஷ்கோவ் கூறும்போது, “ரஷிய கச்சா எண்ணெயிலிருந்து முழுமையாக மாறுவது இந்தியாவிற்கு கடினமாக இருக்கும். அமெரிக்க ஷேல் எண்ணெய் பெரும்பாலும் லேசான ரக கச்சா எண்ணெயாகும். ரஷியா கனமான, கந்தகம் நிறைந்த யூரல்ஸ் எண்ணெயை வழங்குகிறது. இதனால் வெவ்வேறு ரகங்களை கலப்பது செலவுகளை அதிகரிக்கும்” என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com