இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் - அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல்

இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும் - அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல்
Published on

வாஷிங்டன்,

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு அமெரிக்க அரசு சார்பில் தடுப்பூசிகள் வழங்கப்படும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். இதன்படி பல்வேறு ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நாடுகளுக்கு இதுவரை அமெரிக்க அரசு சார்பில் சுமார் 8 கோடிக்கும் அதிமான தடுப்பூசி டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த சமயத்தில், இந்திய அரசு சார்பில் அமெரிக்காவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டன. அதே போல் இந்தியாவில் கொரோனா 2-வது அலையினால் ஏற்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்ள, அமெரிக்க அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அதிபர் ஜோ பைடன் கூறினார். அதன்படி இந்தியாவிற்கு 75 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை அமெரிக்க அரசு அனுப்பி வைத்தது.

இந்த நிலையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க எம்.பி. ராஜா கிருஷ்ணமூர்த்தி, இது குறித்து பேசுகையில், இந்தியாவுக்கு அமெரிக்கா 75 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகளை வழங்கியுள்ளது. இது போதாது, கூடுதலாக வழங்க வேண்டும். அமெரிக்கா உலகளவில் தடுப்பூசி திட்டத்திற்கு உதவுவதற்கான மசோதாவுக்கு 116 எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்த மசோதாவை சட்டமாக்க வேண்டும். இதன் வாயிலாக உலகளவில் உருவாகும் உருமாறிய புதிய கொரோனா அச்சுறுத்தலை சமாளிக்க முடியும். இந்த சட்டத்தின் கீழ் தடுப்பூசி தயாரிப்பை அதிகரிப்பது, வினியோகிப்பது, தொற்று நோய் பரவலை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com