

வாஷிங்டன்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா ஒரு "பொருளாதாரப் பேரழிவின்"விளிம்பில் இருப்பதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகாரங்கள் பள்ளியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். அவரிடம், நெறியாளர் லிடியா போல்கிரீன் இந்திய இளைஞர்களின் எதிர்காலம் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
அந்த கேள்விக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வேலையில்லாத் திண்டாட்டமும், கல்வி முறையில் ஆழமான சிக்கல்களும் நிலவுகின்றன. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் தங்களுக்கு எதிர்காலம் இல்லை என்ற விரக்தியில் இருப்பதாகவும், இந்தியா ஒரு பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் அமர்ந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறு, குறு தொழில்கள் மற்றும் விவசாயம் ஆகியவையே இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன. ஆனால், தற்போது அந்த முதுகெலும்பு உடைக்கப்பட்டுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், 'மேக் இன் இந்தியா' போன்ற திட்டங்கள் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டார். வலுவான உற்பத்தித் தளம் இல்லாமல் இந்தியாவால் வளர முடியாது என்றும், ஒரு சில பெருநிறுவனக் குழுமங்கள் மட்டுமே வளர்ச்சியடைந்து வருவதாகவும் அவர் விமர்சித்தார்.
தனியார் முதலீடுகள் குறைவாக இருப்பதைக் சுட்டிக்காட்டிய அவர், அதானி குழுமம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற ஒரு சில பெரிய நிறுவனங்கள் மட்டுமே வளர்ச்சியடைந்து வருவதாகவும், சிறு வணிகங்கள் மற்றும் டாடா குழுமம் போன்ற பாரம்பரிய நிறுவனங்கள் நெருக்கடியைச் சந்திப்பதாகவும் கூறினார்.
காங்கிரஸ் கட்சியால் மிகவும் சிரமப்பட்டு உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்பு பலவீனம் அடைந்துவிட்டதாக ராகுல் குற்றம் சாட்டினார். மேலும், அதனை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். வலுவான உற்பத்தித் துறை அடித்தளம் இல்லாமல் இந்தியாவால் வெற்றிகரமாக வளர்ச்சியடைய முடியாது என்று கூறிய அவர், "உற்பத்தித் துறை இல்லாமல் நம்மால் வெற்றிகரமாக நிலைத்திருக்க முடியாது என்றும் கூறினார்.