பாகிஸ்தானில் கல்லூரி அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 6 பேர் பலி

பாகிஸ்தானில் கல்லூரி அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாகினர்.
பாகிஸ்தானில் கல்லூரி அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 6 பேர் பலி
Published on

பயங்கரவாதிகளின் சொர்க்கபுரி

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் சொர்க்கபுரியாக இருந்து வருகிறது. பாகிஸ்தானி தலீபான், அல் கொய்தா உள்ளிட்ட ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் அங்கு ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.இவர்கள் அண்டை நாடுகளில் பயங்கரவாதத்தை பரப்பி வருவதோடு உள்நாட்டிலும் பயங்கரவாதத் தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இது ஒருபுறமிருக்க பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்கக் கோரி பலுசிஸ்தான் விடுதலை இயக்கம்' என்கிற அமைப்பு பல ஆண்டுகளாக அந்த நாட்டு ராணுவத்துடன் ஆயுத மோதலில் ஈடுபட்டு வருகிறது.

கல்லூரி அருகே குண்டு வெடிப்பு

இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் பலுசிஸ்தான் மாகாணத்தில் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தொடர் குண்டு வெடிப்பு மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நிகழ்த்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அதேசமயம் பாகிஸ்தான் ராணுவம் இந்த இயக்கத்தை பயங்கரவாத இயக்கமாக அறிவித்து அவர்களை ஒடுக்க கடுமையாக போராடி வருகிறது.இந்த நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவெட்டாவில் உள்ள அறிவியல் கல்லூரிக்கு வெளியே இரவு நேரத்தில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது.

4 பேர் சம்பவ இடத்திலேயே பலி

இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி அறிவியல் கல்லூரியின் ஊழியர்கள் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் பலத்த காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கல்லூரி அமைந்துள்ள பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.

பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

அதனை தொடர்ந்து படுகாயமடைந்த 16 பேரையும் மீட்டு ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இதனிடையே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com