

ஒசாகா,
ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி-20 நாடுகள் உச்சி மாநாட்டின் நிறைவு நாளாக நேற்று கூட்டு பிரகடனம் வெளியிடப்பட்டது.
மாநாட்டில், மின்னணு பொருளாதாரம் தொடர்பான பிரகடனம் ஒன்றும் கொண்டு வரப்பட்டது. நாடுகளுக்கு இடையே சர்வதேச வர்த்தகம், முதலீடு பற்றிய தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்வது மின்னணு பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே முன்மொழிந்த இந்த பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்துவிட்டது.
வர்த்தகம், முதலீடு தொடர்பான தகவல்கள் தேசிய சொத்து என்றும், இதை பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றால் உலக வர்த்தக அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே நேற்று முன்தினம் கூறி இருந்தார். அதன்படி இந்த பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட மறுத்துவிட்டது.
இந்தோனேசியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட மேலும் சில நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக, பிரகடனத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டன.