சவுதி அரேபியா சென்ற ஸ்மிருதி இரானி : ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தம் கையெழுத்து

இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்த அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
சவுதி அரேபியா சென்ற ஸ்மிருதி இரானி : ஹஜ் யாத்திரைக்கான ஒப்பந்தம் கையெழுத்து
Published on

ஜெட்டா,

சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் 3-வது ஹஜ் மற்றும் உம்ரா மாநாடு இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக மத்திய சிறுபான்மை நலத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி நேற்று ஜெட்டா சென்றார்.

அவரை ஜெட்டா விமான நிலையத்தில் இந்திய தூதர் சுகேல் கான் மற்றும் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். ஸ்மிருதி இரானியுடன், உயர்மட்ட குழுவினரும் சென்றுள்ளனர். 2 நாள் பயணமாக சென்றுள்ள ஸ்மிருதி இரானி சவுதி ஹஜ் மற்றும் உம்ரா நலத்துறை மந்திரி தவ்பிக் பின் பஸ்வான் அல் ரபியாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை குறித்த அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.

இந்த பேச்சுவார்த்தையின்போது இந்த ஆண்டுக்கான இருதரப்பு ஹஜ் ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இதன்படி 2024 ஆம் ஆண்டிற்கான 1,75,025 யாத்ரீகர்கள் ஒதுக்கீட்டுடன் இந்தியாவும் சவுதி அரேபியாவும் ஹஜ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, இந்தியாவில் இருந்து ஹஜ் 2024 ஆம் ஆண்டுக்கு மொத்தம் 1,75,025 யாத்ரீகர்களின் ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது, 1,40,020 இருக்கைகள் ஹஜ் கமிட்டி மூலம் பயணிக்க முன்பதிவு செய்யப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 35,005 யாத்ரீகர்கள் தனியார் ஆபரேட்டர்கள் மூலம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சவுதியில் வாழும் இந்தியர்களையும், இந்திய வர்த்தகர்களையும் ஸ்மிருதி இரானி மற்றும் உயர்மட்ட குழுவினர் சந்திக்க உள்ளதாக ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com