டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பயன்படுத்துகிறது: இந்தியாவுக்கு ஐ.நா.சபை பாராட்டு

மக்கள் இடையே ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பங்களை இந்தியா வெற்றிகரமாக பயன்படுத்துகிறது என்று ஐ.நா. சபை பாராட்டி உள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக பயன்படுத்துகிறது: இந்தியாவுக்கு ஐ.நா.சபை பாராட்டு
Published on

நியூயார்க்,

பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி அரசு, டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு முன்னுரிமை அளித்து வருகிறது.

ஆதார், வங்கி பண பரிமாற்றம், காகித பண பரிமாற்றத்தை குறைக்கிற வகையில் டிஜிட்டல் பரிமாற்றம் என பல வகையிலும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புகுத்தி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.

இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்துறையில் பெற்று வருகிற வளர்ச்சியை ஐ.நா. சபை மனமார பாராட்டி உள்ளது. இது தொடர்பாக ஐ.நா. பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையானது, உலக சமூக அறிக்கை 2020-ஐ வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் ஐ.நா. சபை கூறி இருப்பதாவது:-

மக்கள் குழுக்கள் இடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை இந்தியா வெற்றிகரமாக பயன்படுத்தி உள்ளது. புதிய பொது உள்கட்டமைப்பு மற்றும் அரசு நடவடிக்கைகளின் கலவையானது, புதிய அடையாள அமைப்பின் வெற்றியின் பின்னால் உள்ளது. இது, நிதி கணக்குகளின் உரிமை மற்றும் பொதுசேவைகளை இன்னும் பயன் உள்ளதாக ஆக்கும்.

2014-ம் ஆண்டில், இந்திய அரசு வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு, ஆதார் எண் அல்லது பிற அடையாள ஆவணங்கள் அடிப்படையில் வங்கி கணக்குகளை தொடங்குமாறு வங்கிகளை அறிவுறுத்தியது.

இதன்மூலம் இந்தியாவில் வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை பாதிக்கும் கீழாக குறைந்து விட்டது. 2011-ம் ஆண்டு வங்கி கணக்கு இல்லாதவர்களின் எண்ணிக்கை 55 கோடியே 70 லட்சமாக இருந்தது. இது 2015-ம் ஆண்டு, 23 கோடியே 30 லட்சமாக குறைந்துள்ளது.

2017 வாக்கில், 80 சதவீத இளைஞர்கள் குறைந்தபட்சம் தலா ஒரு வங்கி கணக்கையாவது வைத்துள்ளனர். இது வளர்ந்து வரும் பிற நாடுகளின் சராசரியை விட (63 சதவீதம்) அதிகம் ஆகும்.

பயோமெட்ரிக் அடையாள அட்டை, பாலினம் வருமானம், கல்வி அடிப்படையிலான அணுகலை குறைக்க உதவியது. உண்மையில், சமூக பாதுகாப்பு, சுகாதாரம், வாக்களிக்கும் திட்டங்கள் ஆகியவற்றின் செயல்திறனை மேம்படுத்தவும் இந்த அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா தனது அனுபவத்தைக் கொண்டு, மொபைல் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள், பிற தொழில்நுட்பங்களுடன் சேர்ந்து, நிதிச்சேவைகளை பெறுவதில் உள்ள சமத்துவமின்மையை குறைக்க வேண்டும் என்று கூறுகிறது.

இந்தியா டிஜிட்டல் துறையில் பெற்ற அனுபவம், எதிர்காலத்தில் மற்ற நாடுகளிலும் பிரதிபலிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com