

நியூயார்க்
அமெரிக்க அரசை திரும்பி பார்க்கும் வகையிலான இந்திய நடைமுறையை பற்றி டிரம்ப் பரபரப்பு பதிவை வெளியிட்டு உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெளியிட்டு உள்ள பதிவில், இந்த மாத தொடக்கத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் ஞானேஷ் குமார் என்னிடம் பேசினார். அப்போது அவர், நம்முடைய அரசு நிர்வாக நடைமுறைகளை பற்றி கேட்டு அறிந்து கொண்டார்.
அமெரிக்காவில் முறையான ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை இல்லாமல் நீங்கள் எப்படி தேர்தல் நடத்துகிறீர்கள்? என அப்போது கேட்டார்.
இந்தியாவில் கடந்த முறை நடந்த தேர்தலில் 64.60 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். 1 சதவீதத்திற்கும் குறைவானோர் தபால் வாக்குகளை செலுத்தினார்கள்.
ஒவ்வொரு வாக்காளரும், முறையான புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை ஒன்றை வைத்திருக்கின்றனர் என பதிவிட்டார். அதனால் தற்போது, அமெரிக்காவை பாதுகாப்போம் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம் என்று அந்த பதிவில் தெரிவித்து உள்ளார்.
இதன்படி, அமெரிக்க குடிமக்கள் மட்டுமே அமெரிக்க தேர்தல்களை முடிவு செய்பவர்களாக இருக்க வேண்டும் என வெள்ளை மாளிகையும் தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பான சட்டமசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது. இதனால், குடிமகன் என்பதற்கான அடையாளத்துடன், முறையான அடையாள அட்டையை இனி வாக்காளர்கள் தங்களுடன் கொண்டு வர வேண்டும் என்ற வகையிலான நடைமுறை கொண்டு வரப்படும் என வெள்ளை மாளிகை வெளியிட்ட தகவல் தெரிவிக்கின்றது.
பொதுவாக பிற நாட்டு தேர்தல்களில் அமெரிக்காவின் தலையீடு உள்ளது என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது பரவலாக எழுவதுண்டு. வெனிசுலா அதிபர் நிகோலஸ் கைது நடவடிக்கை, தொடர்ந்து அமெரிக்காவுக்கு வேண்டிய நபர், வெனிசுலா இடைக்கால அதிபராக நியமனம் போன்றவையும், ஈரானில் கடந்த டிசம்பரில் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஏற்பட்டபோது, அதனை ஊக்கப்படுத்தும் வகையில் டிரம்ப் பேசியது, அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வன்முறைக்கு பலியானது என்று கடந்த கால வரலாறுகள் இதனை உணர்த்தும் வகையில் உள்ளது.
ஆனால், அமெரிக்காவிலோ நிலைமை வேறுபட்டு உள்ளது. சமீப காலங்களாக அமெரிக்காவுக்குள் வேறு நாட்டினர் சட்டவிரோத வகையில் ஊடுருவுகின்றனர் என்ற குற்றச்சாட்டை அந்நாட்டு அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதன்படி, இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டினர் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த சூழலில், இந்தியாவின் தேர்தல் நடைமுறை அமெரிக்க அரசை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இதனை முன்னிட்டே, அமெரிக்காவும் தன்னுடைய தேர்தல் நடைமுறையை மாற்றி கொள்வதற்கான முனைப்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் 110 கோடிக்கும் கூடுதலான மக்கள் தொகை உள்ள நிலையில் 60 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டு முறைகேடுகள் எதுவுமின்றி அமைதியான முறையில் தேர்தல் நடத்தி முடிக்கப்படுகிறது. இதனை பின்பற்றி அமெரிக்காவும் செயல்பட முயற்சிக்கும் என தெரிகிறது.