ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்து இந்தியா அதிரடி நடவடிக்கை


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்து இந்தியா அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Jun 2025 12:09 PM IST (Updated: 26 Jun 2025 1:25 PM IST)
t-max-icont-min-icon

பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள்

குயிங்டாவோ,

சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் குயிங்டாவோ நகரத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சார்பில் பாதுகாப்பு மந்திரிகளுக்கான உச்சி மாநாடு இன்று நடந்து வருகிறது. இதில் உறுப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு மந்திரிகள் பங்கேற்றுள்ளனர்.

ஒத்துழைப்பின் வழியே நாடுகளின் ஸ்திரத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் 2001-ம் ஆண்டில் உருவான இந்த அமைப்பில், இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில் கையெழுத்திட மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் மறுத்து விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

இதுபற்றி வெளியான தகவலில், கடந்த ஏப்ரல் 22-ந்தேதி நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் விடுத்து விட்டு, பாகிஸ்தானில் நடந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் தாக்குதலை கூட்டறிக்கையில் சேர்க்க முனைந்துள்ளன. ஆனால், பயங்கரவாதம் தொடர்புடைய விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இருக்க முடியாது என மத்திய மந்திரி தெளிவுப்படுத்தி விட்டார்.

இந்த விவகாரத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுதுணையாக நிற்க வேண்டியது முக்கியம் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிங் கையெழுத்திட மறுப்பு தெரிவித்து விட்ட நிலையில், கூட்ட முடிவில் கூட்டறிக்கை வெளியிடப்படாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற பயங்கரவாத அமைப்புக்கு உள்ள தொடர்பு தெரிய வந்தது.

இதற்கு பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம், பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியது. 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என மத்திய அரசு கூறியது. பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என அப்போது தெரிவித்தது.

1 More update

Next Story