உலகின் பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கி வரும் இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டு

உலகின் பல்வேறு நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி வரும் இந்தியாவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்
ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்
Published on

தடுப்பூசி ஏற்றுமதி

உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வரும் கொரோனாவுக்கு எதிராக 2 தடுப்பூசிகளை இந்தியா தயாரித்து இருக்கிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்சின், சீரம் நிறுவனம் உற்பத்தி செய்து வரும் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனங்களின் கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளும் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்த தடுப்பூசிகளை இந்தியா பயன்படுத்துவது மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கும் வழங்கி வருகிறது. அந்தவகையில் இலங்கை, நேபாளம், வங்காளதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு நன்கொடையாகவும், பிரேசில், மொராக்கோ நாடுகளுக்கு வணிக ரீதியாகவும் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்து வருகிறது.

ஐ.நா. பொதுச்செயலாளர்

இந்தியாவின் இந்த பரந்த மனப்பான்மையை பல்வேறு நாடுகளும் பாராட்டி வருகின்றன. தற்போது ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெசும் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவை நாம் எவ்வளவு நம்புகிறோம் என நான் கூற விரும்புகிறேன். அதாவது இந்தியா மிகவும் மேம்பட்ட மருந்து துறைகளை கொண்டிருக்கிறது. பொது மருந்துகளை உருவாக்குவதில் மிகவும் முக்கியமான பங்கை இந்தியா செய்து வருகிறது. அதைவிட முக்கியமாக, அந்த மருந்துகள் உலகம் முழுவதும் கிடைப்பதற்கு வழிவகை செய்கிறது.

உலகின் மிகச்சிறந்த சொத்து

உலகளாவிய தடுப்பூசி திட்டத்தை சாத்தியப்படுத்துவதற்கு இந்தியா ஒரு முக்கிய பங்காற்றும் எனவும், அதற்கான அனைத்து வசதிகளும் இந்தியா கொண்டிருக்கும் எனவும் நான் உறுதியாக நம்புகிறேன். இந்தியாவின் இந்த உற்பத்தி திறன், இன்றைய உலகின் மிகச்சிறந்த சொத்துகளில் ஒன்றாகும். இதை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்பதை உலகு உணர்ந்திருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

இந்தியாவில், ஒரு உற்பத்தி, ஒரு மிக உயர்ந்த உற்பத்தி, இரண்டும் இந்தியா உற்பத்தி செய்த தடுப்பூசிகள் என்பதை நான் அறிவேன். மற்றவர்களிடமும் ஒரு முன்னோக்கு, மிக முக்கியமான முன்னோக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். அதற்காக நாங்கள் இந்திய நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளோம்.

இவ்வாறு ஆன்டனியோ குட்டரெஸ் கூறினார்.

அமெரிக்கா பாராட்டு

முன்னதாக இந்தியாவின் தடுப்பூசி ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு அமெரிக்காவும் பாராட்டு தெரிவித்து இருந்தது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை தனது டுவிட்டர் தளத்தில், லட்சக்கணக்கான தடுப்பூசி டோஸ்களை தெற்கு ஆசியாவுக்கு பகிர்ந்து உலக சுகாதாரத்தில் இந்தியா மேற்கொண்டு வரும் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். மாலத்தீவு, பூடான், வங்காளதேசம், நேபாளம் போன்ற நாடுகளுக்கு இந்தியா இலவசமாக அனுப்பியிருக்கும் தடுப்பூசிகள் பிற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும். உலக சமூகத்துக்கு ஒரு உண்மையான நண்பனாக தனது மருத்துவத்துறையை இந்தியா பயன்படுத்துகிறது என்று குறிப்பிட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com