குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்

அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
குவைத் விமான நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம்
Published on

குவைத் சிட்டி,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த மோதலால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

அதேவேளை, அமெரிக்காவுடனான மோதலை தொடர்ந்து ஹர்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதையடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மோதலை குறைக்க அமெரிக்கா, ஈரான் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் குவைத் மீது ஈரான் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. குவைத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.

தாக்குதலில் உயிரிழந்தவர் இந்தியர் என தெரியவந்துள்ளது. அவரின் பெயர் உள்ளிட்ட விவரத்தையும் குவைத் அரசு வெளியிடவில்லை. அதேவேளை, தாக்குதலை தொடர்ந்து குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசிய மோதல்களில், பொதுமக்கள் மற்றும் பொதுமக்களுக்கான உள்கட்டமைப்புகள் இலக்காகக் கொள்ளப்படக்கூடாது; இத்தாக்குதல்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான போரில், வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com