

கொழும்பு,
இலங்கையில் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், தலைநகர் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம், இலங்கை மக்களுக்கு இந்தியாவுக்கான விசா வழங்குவதை நிறுத்தி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதை இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுத்து உள்ளது.
இது தொடர்பாக தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில், இலங்கை குடிமக்களான எமது விசா பிரிவு ஊழியர்கள் கடந்த சில நாட்களாக அலுவலகத்திற்கு வர முடியாத காரணத்தால் விசா செயற்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டன. இந்த செயல்பாடுகளை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்தியாவுக்கு இலங்கை மக்களின் பயணத்தை எளிதாக்குவதற்கு உறுதிபூண்டுள்ளதாக கூறியுள்ள தூதரகம், இந்தியர்கள் இலங்கையில் இருப்பது போல் இலங்கை மக்களும் இந்தியாவில் வரவேற்கப்படுகிறார்கள் என்றும் கூறியுள்ளது.