இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்: கேரளாவை சேர்ந்த ஒருவர் பலி; 2 பேர் காயம்

லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் பகுதியை தாக்கியது.
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்: கேரளாவை சேர்ந்த ஒருவர் பலி; 2 பேர் காயம்
Published on

ஜெருசலேம்,

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி நேற்று காலை லெபனான் நாட்டில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேல் நாட்டின் மேற்கு பகுதியின் கலிலீ மாகாணத்தில் உள்ள மார்கலியோட் பகுதியை தாக்கியது. இந்த பகுதியில் வெளிநாட்டைச் சேர்ந்த பலர் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஏவுகணை தாக்கியதில் ஏழு வெளிநாட்டு தொழிலாளர்கள் காயம் அடைந்த நிலையில், அதில் மூன்று பேர் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இவர்களில் பாட்னிபின் மேக்ஸ்வெல் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரது உடல் ஜிவ் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் புஷ் ஜோசப், பால் மெல்வின் ஆகியோர் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.

பெட்டா டிக்வாவில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனையில் ஜோசப் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் உடல்நலம் தேறியுள்ளார். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவர் இந்தியாவில் உள்ள தனது குடும்பத்தினருடன் பேச முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த மெல்வினுக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டது. ஜிவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளையில் ஹிஸ்புல்லாவுக்கு பதிலடி கொடுக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து நடத்திய தாக்குதலில் 229 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com