

நியூயார்க்,
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இந்தியர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:- பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் நகரைச்சேர்ந்தவரான சந்தீப் சீங், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா விசாவில் அமெரிக்கா சென்றார். பின்னர் அங்குள்ள மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள ஜாக்சன் சிட்டி என்ற பகுதியில், சந்தீப் சிங்கிற்கு பணி கிடைத்ததையடுத்து, அங்கேயே, தங்கி பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, சந்தீப் சிங் உட்பட மேலும் இரண்டு பேர் தங்கள் வீட்டு முன் நின்று கொண்டிருந்தனர். அப்போது, முகமூடி அணிந்த படி அங்கு வந்த கொள்ளையர்கள், சந்தீப் சிங்கிடம் இருந்து பணம் மற்றும் செல்போன்களை பறித்துச்சென்றனர். அப்போது ஏற்பட்ட தகராறின் போது, கொள்ளையர்கள் தங்களிடம் இருந்த துப்பாக்கியால் சந்தீப் சிங்கை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயம் அடைந்த சந்தீப் சிங், ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சை பலனின்றி சந்தீப் சிங் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து வரும் அமெரிக்க காவல்துறை அதிகாரிகள், ஒரு குழுவினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை சம்பவத்தை இந்த கும்பல்தான் அரங்கேற்றியிருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. ஜாக்சன் நகரில் நடைபெற்ற சமீப கால கொள்ளை சம்பவத்திற்கு காரணமான கும்பலே இந்த கொலையை செய்து இருக்க வேண்டும் என்று அமெரிக்க போலீஸ் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜாக்சன் நகரில் நடப்பு ஆண்டு நடைபெறும் 58-வது கொலை இதுவாகும். கடந்த இருவாரங்களில் அமெரிக்காவில் கொள்ளை கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டாவது இந்தியர் சந்தீப் சிங் ஆவார். கடந்த நவம்பர் 16 ஆம் தேதி, கலிபோர்னியா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச்சேர்ந்த 21 வயது மாணவர் கொள்ளை கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டது கவனிக்கத்தக்கது.