இந்திய கடற்படையின் போர்க்கப்பல் ஐ.என்.எஸ். சூரத் ஓமனை சென்றடைந்தது

இந்தியா-ஓமன் நாடுகளுக்கு இடையே 15-வது கூட்டு கடற்படை பயிற்சி 'நசீம் அல் பஹர்' என்ற பெயரில் தொடங்குகிறது.
இந்திய கடற்படையின் போர்க்கப்பல் ஐ.என்.எஸ். சூரத் ஓமனை சென்றடைந்தது
ஐ.என்.எஸ். சூரத்
Published on: 

மஸ்கட்,

இந்தியா-ஓமன் நாடுகளுக்கு இடையே 15-வது கூட்டு கடற்படை பயிற்சி 'நசீம் அல் பஹர்' என்ற பெயரில் தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக இந்திய போர்க்கப்பல் ஐ.என்.எஸ். சூரத் ஓமன் நாட்டுக்கு சென்றடைந்துள்ளது.

நல்லுறவும், கூட்டு பயிற்சியும்

இந்தியா மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக சிறப்பான நல்லுறவு நிலவி வருகிறது. வர்த்தகம், பொருளாதாரம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

நசீம் அல் பஹர்

இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையிலான 15-வது கூட்டு கடற்படை பயிற்சியானது 'நசீம் அல் பஹர்' (கடல் தென்றல்) என்ற பெயரில் நடைபெறுகிறது.

உற்சாக வரவேற்பு

இந்த முக்கிய கூட்டு பயிற்சியில் பங்கேற்பதற்காக, இந்திய கடற்படைக்கு சொந்தமான அதிநவீன போர்க்கப்பலான 'ஐ.என்.எஸ். சூரத்', ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள சுல்தான் காபூஸ் துறைமுகத்திற்கு நேற்று வருகை புரிந்தது. துறைமுகத்திற்கு வந்த இந்திய கப்பலுக்கு ஓமன் கடற்படை அதிகாரிகள் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடல் ரோந்துப்பணி

இந்த பயிற்சியின் போது இரு நாட்டு கடற்படை வீரர்களும் கீழ்க்கண்ட நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர்:

• ஒருவருக்கொருவர் போர்க்கப்பல்களை நேரில் பார்வையிடுதல்.

• கடல்சார் செயல்பாட்டு அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்.

• நட்பு ரீதியிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றல்.

கூட்டு பயிற்சி

இதனைத்தொடர்ந்து, இந்திய மற்றும் ஓமன் கடற்படையினர் இணைந்து நடுக்கடலில் ஒருங்கிணைந்த ரோந்துப்பணியிலும் ஈடுபட உள்ளனர். இந்த கூட்டு பயிற்சியின் மூலம் இரு நாட்டு கடற்படைகளுக்கும் இடையிலான செயல்பாட்டு ஒருங்கிணைப்பு, தொழில்முறை ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிதல் மேலும் வலுப்பெறும் என பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X