போர் பதற்றத்திற்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியை இந்திய கப்பல் கடந்தது

ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவை நோக்கி புறப்பட்ட கப்பல் ஒன்று பாதுகாப்பாக ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து உள்ளது.
போர் பதற்றத்திற்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியை இந்திய கப்பல் கடந்தது
Published on

மத்திய கிழக்கு போரில் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் அங்கு கப்பல் போக்குவரத்து முடங்கியது.இருந்தபோதிலும் இந்தியாவை நோக்கி புறப்பட்ட கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்தது. இதனால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றிய சில கப்பல்கள் இந்தியாவை வந்தடைந்தன.

இதற்கிடையே ஈரான் துறைமுகங்களை முடக்கும் வகையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் கடந்த ஏப்ரல் 13-ந்தேதி முதல் அமெரிக்க கடற்படை முற்றுகை நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் அந்த ஜலசந்தியில் தனது கட்டுப்பாட்டை அதிகரித்து உள்ளது. இதில் 2 இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவை நோக்கி புறப்பட்ட கப்பல் ஒன்று பாதுகாப்பாக ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து உள்ளது.

மார்ஷல் தீவுகளின் கொடியை ஏந்திய எம்.டி. சர்வ சக்தி என்ற கப்பல் 46,313 மெட்ரிக் டன் எல்.பி.ஜியுடன் (திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. அந்த கப்பல் வெற்றிகரமாக ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்து உள்ளது.

அது வருகிற 13-ந்தேதி விசாகப்பட்டினத்தை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ஈரானின் கடும் கட்டுப்பாடுகளுக்கு பிறகு ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்த முதல் இந்திய கப்பல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை, இந்திய கொடியை ஏந்திய 10 எரிசக்தி கப்பல்கள், 9 எல்.பி.ஜி. கப்பல்கள் மற்றும் ஒரு கச்சா எண்ணெய் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்துள்ளன.

X

Daily Thanthi
www.dailythanthi.com