

கோலாலம்பூர்,
மலேசியா தனி நாடாக உருவாகி, 55 ஆண்டுகளில் இதுவரை அங்கு ஒரு இந்தியர் கூட அட்டார்னி ஜெனரல் பதவி வகித்தது இல்லை. இந்த நிலையில் முதல்முறையாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட டாமி தாமஸ் அந்தப் பதவிக்கு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
2 வாரங்களுக்கு முன் புதிய பிரதமர் மகாதீர் முகமது, டாமி தாமசை அட்டார்னி ஜெனரலாக நியமிக்க பரிந்துரை செய்து உள்ளார் என்ற தகவல்கள் வெளியானபோது, அங்கு மூன்றில் இரு பங்கு மக்கள் தொகையை கொண்ட மலாய் சமூகத்தினர், முஸ்லிம் ஒருவரைத்தான் அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் டாமி தாமசை அட்டார்னி ஜெனரலாக நியமிக்க மன்னர் ஐந்தாம் சுல்தான் முகமது தனது ஒப்புதலை வழங்கி விட்டார்.
இது தொடர்பாக மலேசிய அரண்மனை விடுத்து உள்ள அறிக்கையில், தாமஸ் நியமனம், மத, இன மோதல்களை உருவாக்காது, மலேசிய மக்கள் இனம், மதம் கடந்து நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
டாமி தாமஸ், மலேசியாவின் மிகச் சிறந்த வக்கீல்களில் ஒருவர். 40 ஆண்டுகளுக்கு மேல் சட்டத்துறையில் அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் பொறுப்பு ஏற்றதும், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்புடைய ஊழல் வழக்கின் விசாரணையை விரைவுபடுத்துவார் என்று தகவல்கள் கூறுகின்றன.