

வாஷிங்டன்,
அமெரிக்காவில் வரும் நவம்பர் 3-ந் தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடக்க உள்ளது.
இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி டிரம்பை எதிர்த்து போட்டியிட உள்ள ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்வு செய்வதற்கு அமெரிக்க மாகாணங்களில் கட்சி தேர்தல் நடந்து வருகிறது.
இந்த தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் எம்.பி. துளசி கப்பார்டு போட்டியில் இருந்தார். ஆனால் ஜோ பிடன் கை ஓங்கி வருகிற நிலையில் துளசி கப்பார்டு, தான் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.
இதையொட்டி நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட அறிக்கையில், நான் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொள்கிறேன். எனது முழு ஆதரவையும் ஜோ பிடனுக்கு அளிக்கிறேன். பல பிரச்சினைகளில் எனக்கும், ஜோ பிடனுக்கும் இடையே கருத்து வேறுபாடு உண்டு. ஆனாலும் அவர் நல்ல இதயம் படைத்தவர் என்பதை நான் அறிவேன். அவர் அன்பால் தூண்டப்பட்டு, நமது நாட்டுக்கும், அமெரிக்க மக்களுக்கும் நல்லது செய்வார் என கூறி உள்ளார்.