

வாஷிங்டன்,
அமெரிக்காவில் தற்போது சுமார் 40 லட்சம் இந்தியர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 16 லட்சம் பேர் விசாக்களைப் பெற்றுள்ளனர். 14 லட்சம் பேர் இயற்கையான குடியிருப்பாளர்கள். 10 லட்சம் பேர் அமெரிக்காவில் பிறந்தவர்கள் ஆவார்கள். அமெரிக்காவில் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள் மூலம் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி அமெரிக்க வாழ் இந்திய நடுத்தர குடும்பங்கள் ஆண்டுக்கு 1 லட்சத்து 23 ஆயிரத்து 700 டாலர் (சுமார் ரூ.93 லட்சம்) சம்பாதிக்கின்றனர். இது அமெரிக்காவின் தேசிய சராசரி வருமானத்தை விட இரு மடங்கு என்பது முக்கிய அம்சம். ஆக, அமெரிக்கர்களை விட இந்தியர்களின் வருமானம் அதிகம் ஆகும்.
இன்னொரு சிறப்பு, அமெரிக்க வாழ் இந்தியர்களில் 79 சதவீதத்தினர் கல்லூரி பட்டதாரிகள். இதில் அமெரிக்க தேசிய சராசரி 34 சதவீதம்தான். ஆக இதிலும் 2 மடங்குக்கு மேலாக இந்தியர்கள் உள்ளனர். ஆசிய நாடுகளிலேயே இந்தியர்களின் வருமானம்தான் அதிகம். அமெரிக்க வாழ் இந்திய நடுத்தர குடும்பங்கள் 1 லட்சத்து 23 ஆயிரத்து 700 டாலர் சம்பாதிக்கிற வேளையில் தைவான் நாட்டினர் 97 ஆயிரத்து 129 டாலரும், பிலிப்பைன்ஸ் நாட்டினர் 95 ஆயிரம் டாலரும் சம்பாதிக்கின்றனர்.