இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளுக்கு சாதகம்: சர்வதேச நிதியம் கருத்து

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, உலக நாடுகளுக்கு சாதகமான செய்தி என்று சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கருத்து தெரிவித்துள்ளார்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on

வாஷிங்டன்,

இந்தியாவின் நடப்பாண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) இந்த வார தொடக்கத்தில் கணித்தது. இது சீனாவின் 4.4 சதவீத வளர்ச்சியைக் காட்டிலும் இரு மடங்கு ஆகும்.

உலக பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில் வாஷிங்டனில், சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தின் இடையே சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், அதிக விகிதத்தில் வளரும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி உயர்வான அளவில் நடப்பாண்டில் 8.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு ஆரோக்கியமானது. உலகுக்கு சாதகமானது. ஆனால் வளர்ச்சி மந்தம் ஒரு பெரும் சிக்கலை உருவாக்கும் என குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச சூரிய சக்தி கூட்டணியுடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் இந்தியா முன்னிலை வகிக்க உறுதி பூண்டுள்ளது. டிஜிட்டல் பணத்திலும் இந்தியா முன்னணியில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

சர்வதேச நிதியத்தின் இந்திய திட்ட இயக்குனர் நடா சவுரி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கொரோனா தொற்று பாதிப்பு காலத்தில் பொருளாதார மேலாண்மை, இந்தியாவின் வலுவான பொருளாதார மீட்சிக்கு வழி வகுத்துள்ளது. இதன் காரணமாக தற்போது உக்ரைனிய நெருக்கடி பொருளாதார பாதிப்புகளையும் எதிர்கொள்ளும் வலுவான நிலையில் இந்தியா உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி, உலகப்பொருளாதாரத்தை உயர்த்துகிறது என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com