

வாஷிங்டன்,
விண்வெளியில், 300 கி.மீ. தொலைவில் உள்ள செயற்கைகோள் ஒன்றை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் சோதனையை இந்தியா கடந்த வாரம் வெற்றிகரமாக செய்தது. இதை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த சோதனை ஒரு பயங்கரமான விஷயம் என்று அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா முதல்முறையாக கருத்து கூறியுள்ளது. நாசா நிர்வாகி ஜிம் பிரிடன்ஸ்டின், தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாக ஊழியர்களிடையே பேசுகையில் இதை தெரிவித்தார். அவர் பேசியதாவது:-
செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகணை சோதனையை இந்தியா செய்துள்ளது. இதனால், 400 குப்பை துண்டுகள் உருவாகி உள்ளன. இது பயங்கரமான விஷயம். எல்லா குப்பைகளும் கண்டுபிடிக்கத் தகுந்த அளவு பெரிதானவை அல்ல.
10 செ.மீட்டருக்கு மேல் பெரிதான குப்பை துண்டுகளை மட்டும் நாசா கண்டறிந்து வருகிறது. இதுவரை, இதுபோன்ற 60 துண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 24 துண்டுகள், சர்வதேச விண்வெளி நிலையத்தின் உச்சிக்கு மேலே சென்றுவிட்டன. இது, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கும், அங்குள்ள விண்வெளி வீரர்களுக்கும் அச்சுறுத்தலாக அமையும்.
தற்போதுவரை, விண்வெளி வீரர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர். எதிர்காலத்தில், விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை அங்கு அனுப்புவதற்கு இதுபோன்ற செயல்கள் உகந்தவையாக இருக்காது.
இந்தியாவை பார்த்து மற்ற நாடுகளும் செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகணை சோதனை நடத்த முயற்சிக்கக்கூடும். இவை ஏற்கத்தக்கது அல்ல. இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும் என்பதில் நாசா தெளிவாக இருக்கிறது. விண் வெளியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எல்லா நாடுகளுக்கும் இருக்கிறது.
கடந்த 2007-ம் ஆண்டு, சீனா இதுபோன்ற சோதனை நடத்தியபோது ஏராளமான குப்பைகள் உண்டாகின. அவை இன்னும் விண்வெளியில் இருக்கின்றன. அப்பிரச்சினையை இப்போதும் கையாண்டு வருகிறோம். பிற நாடுகளால் உண்டான பாதிப்பை அமெரிக்கர்களின் வரிப்பணத்தை கொண்டு சரிசெய்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.