விளம்பர சந்தையில் தனி ஆதிக்கம்: கூகுள் மீது அமெரிக்க மாகாணங்கள் வழக்கு

விளம்பர சந்தையில் தனி ஆதிக்கம் செலுத்த சட்ட விரோத நடவடிக்கைகள் மேற்கொண்டதாக கூகுள் நிறுவனத்தின் மீது அமெரிக்க மாகாணங்கள் குற்றம் சாட்டியுள்ளன.
விளம்பர சந்தையில் தனி ஆதிக்கம்: கூகுள் மீது அமெரிக்க மாகாணங்கள் வழக்கு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிற பன்னாட்டு இணைய தேடுபொறி நிறுவனம் கூகுள் ஆகும். இந்த நிறுவனம், இணைய விளம்பர சந்தையில் தனது தனி ஆதிக்கத்தை பாதுகாப்பதற்காக சட்டவிரோத நடவடிக்கைளை மேற்கொண்டதாக குற்றம்சாட்டி, அமெரிக்காவில் டெக்சாஸ் தலைமையில் 10 மாகாணங்கள் வழக்கு தொடர்கின்றன.

இந்த மாகாணங்களின் பட்டியலில் டெக்சாஸ், ஆர்கன்சாஸ், இண்டியானா, கென்டக்கி, மிசவுரி, மிசிசிப்பி, தென் டகோட்டா, வட டகோட்டா, உட்டா மற்றும் இடாஹோ ஆகியவை இடம் பிடித்துள்ளன. கூகுள் நிறுவனத்தின் விளம்பர வருமானம் அதன் வருவாயில் 80 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இணைய விளம்பர சந்தையில் விளம்பர ஏலங்களை கையாள்வதற்காக இந்த நிறுவனம், பேஸ்புக் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஆனால் தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை கூகுள் மறுத்துள்ளது. இதுபற்றி அந்த நிறுவனம் கூறும்போது, வணிகங்களுக்கு உதவுவதுடன், பொது மக்களுக்கு பயனளிக்கும் அதிநவீன விளம்பர தொழில்நுட்ப சேவைகளில் நாங்கள் முதலீடு செய்துள்ளோம். கடந்த தசாப்தத்தில் (10 ஆண்டுகளில்) டிஜிட்டல் விளம்பர கட்டணங்கள் குறைந்து விட்டன. விளம்பர தொழில்நுட்ப கட்டணங்களும் குறைந்து வருகின்றன. கூகுள் விளம்பர தொழில்நுட்ப கட்டணங்கள், சராசரியை விட குறைவாக உள்ளன. எனவே கோர்ட்டில் எங்களை நாங்கள் தற்காத்துக்கொள்வோம் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com