உலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை?

உலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக வங்கி தலைவர் பொறுப்பிற்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை?
Published on

நியூயார்க்,

உலக நாடுகளில் வறுமையை குறைக்கவும், பொருளாதார முன்னேற்றத்துக்காகவும் செயல்பட்டு வரும் உலக வங்கியில் இந்தியா உள்பட 189 நாடுகள் அங்கத்தினராக உள்ளன. உலக வங்கியின் தலைமையகம் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ளது. இந்த வங்கியின் தலைவராக இருக்கும் ஜிம் யாங் கிம், ஜனவரி இறுதியுடன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து, உலக வங்கியின் தலைவர் பொறுப்புக்கு முன்னிறுத்தும் நபரை தேர்வு செய்வதற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. அமெரிக்காவின் கருவூல செயலர் ஸ்டீவன் னுச்சின், தற்காலிக தலைவர் மிக் முன்ல்வனே மற்றும் இவாங்கா டிரம்ப் ஆகியோரால் மேற்பார்வை செய்யப்பட்டு வருவதாக அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. உலக வங்கி தலைவர் பொறுப்புக்கு முன்னிறுத்தும் நபரை பரிந்துரை செய்யும் பணியை இந்தக்குழு நேர்முகத்தேர்வு நடத்தி மேற்கொள்ளும் எனவும் தெரிகிறது.

இந்த நிலையில், உலக வங்கி தலைவர் பொறுப்புக்கு இந்திரா நூயியை முன்னிறுத்த அமெரிக்கா பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க முன்னணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இவாங்கா டிரம்ப், இந்திரா நுயியை முன்னிறுத்த ஆதரவு தெரிவிப்பதாகவும் அந்த நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

63 வயதான இந்திரா நூயி, இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர். தமிழ்நாட்டிலுள்ள சென்னையில் பிறந்த இந்திரா நூயி, பெப்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக 12 வருடமாக பதவி வகித்து, திறம்பட செயலாற்றினார். கடந்த ஆண்டுதான் அப்பொறுப்பில் இருந்து இந்திரா நூயி பதவி விலகினார்.

உலக வங்கியின் தலைவரை அவ்வங்கியின் போர்டு இயக்குநர்கள் தேர்வு செய்வர். உலக வங்கியின் மிகப்பெரிய பங்குதாரராக அமெரிக்காவே உள்ளது. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் துவங்கப்பட்ட உலக வங்கியின் தலைவர்கள் அனைவருமே அமெரிக்கர்களாகவே இருந்துள்ளனர்.

முன்னதாக, இவாங்கா டிரம்ப் உலக வங்கியின் தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலை திட்டவட்டமாக வெள்ளை மாளிகை மறுத்துவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com