டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் காயமடைந்த போலீஸ்காரர் உயிரிழப்பு

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் காயமடைந்த போலீசார் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் காயமடைந்த போலீஸ்காரர் உயிரிழப்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3ந்தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வருகிற 20ந்தேதி அவரது பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதில் முறைப்படி அமெரிக்காவின் 46வது அதிபராக பைடன் பொறுப்பேற்க உள்ளார்.

ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுத்த அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்துள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகளை கூறினார். இதற்கிடையில், ஜோ பைடன் வரும் 20ந்தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை நாடாளுமன்றம் மேற்கொண்டது.

இந்நிலையில், பைடன் அதிபராக தேர்வு செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6ந்தேதி நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் முன் டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் கலைந்து போகும்படி கூறினர். தொடர்ந்து, கலகக்காரர்களை வெளியேற்றும் பணியில் கேபிடால் நகர போலீசார் ஈடுபட்டனர். கட்டுக்கடாமல் திரளானோர் கூடிய நிலையில், கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. இதனால் ஒரு கட்டத்தில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில், போராட்டக்காரர்களை கலைக்க அவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பெண் ஒருவர் உயிரிழந்து உள்ளார். இந்த சம்பவத்தில் மொத்தம் 2 பெண்கள் உள்பட 4 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.

இந்நிலையில், அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் காயமடைந்த போலீசார் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில், கடந்த 6ந்தேதி டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்கும் பணியில் பிரையன் சிக்நிக் என்ற போலீசாரும் ஈடுபட்டார். அவர் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டபொழுது, பலத்த காயமடைந்து உள்ளார்.

இதனால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும், அதில் பலனின்றி உயிரிழந்து விட்டார் என தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com