துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் அமீரக துணை அதிபர் அதிகாரிகளுடன் ஆய்வு

துபாயில் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி தொடங்க உள்ள எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி வளாகத்தில் அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அதிகாரிகளுடன் சென்று நேரில் ஆய்வு செய்தார்.
துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் அமீரக துணை அதிபர் அதிகாரிகளுடன் ஆய்வு
Published on

அமீரக துணை அதிபர் நேரில் ஆய்வு

துபாயில் கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியானது இந்த ஆண்டிற்கு கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. சற்று தாமதமானாலும் அனைத்து ஏற்பாடுகளும் கடந்த ஆண்டு முதல் முழு வீச்சில் நடந்து வந்தது.அனைத்து கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்து எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி தொடங்குகிறது. இங்கு வரும் பார்வையாளர்களை வரவேற்க இறுதி கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் நேற்று அதிகாரிகளுடன் சென்று வளாகம் முழுவதும் ஆய்வு செய்தார்.

தளங்களின் மீது ஏறி நின்று பார்வையிட்டார்

முன்னதாக கண்காட்சி வளாகத்திற்கு வருகை புரிந்த அவரை அமீரக சர்வதேச ஒத்துழைப்புக்கான துணை மந்திரியும், எஸ்போ 2020 கண்காட்சியின் தலைவருமான ரீம் அல் ஹாஷெமி, துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு அவர்களுடன் அந்த கண்காட்சி வளாகத்தில் துணை அதிபர் ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டு இருந்த பல்வேறு தளங்களின் மீது ஏறி நின்று கண்காட்சி வளாகத்தை பார்வையிட்டார்.

இந்த ஆய்வு குறித்து அவர் கூறியதாவது:-

இறுதி கட்ட ஏற்பாடுகள்

எக்ஸ்போ 2020 கண்காட்சி நடைபெற இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் இறுதி கட்ட ஏற்பாடுகள் குறித்து இன்று (அதாவது நேற்று) அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு உலக அளவில் நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வுக்காக அனைத்து அரங்கங்களும் தயார் நிலையில் உள்ளது. அதேபோல் அதில் பங்கேற்க அனைத்து நாட்டில் இருந்து பார்வையாளர்கள் பறந்து வருவதற்கு தயாராக உள்ளனர். அமீரகத்தில் துபாய் தற்போது உலக கவனத்தை ஈர்த்து வருகிறது. இதில் கலந்து கொள்ளும் 191 நாடுகளும் நேர்மறையான நோக்கத்துடன் பங்கேற்க உள்ளன. கண்காட்சி வளாகத்தில் அனைத்து உள்கட்டமைப்பு பணிகளும் நிறைவடைந்தது. தற்போது அடுத்த மாதம் தொடங்கி 6 மாதங்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் 191 நாடுகள் உலகை நினைவு கூரும் வகையில் நம்மை சந்தித்து செல்ல உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து நேற்று அபுதாபி பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-

கலாசார நிகழ்வு

இன்று முதல் இன்னும் ஒரு மாதத்தில் அமீரகம் எக்ஸ்போ 2020 கண்காட்சியை துபாயில் பெருமையுடன் நடத்த உள்ளது. இது உலகின் மிகப்பெரிய கலாசார நிகழ்வாகும்.எனது சகோதரர் முகம்மது பின் ராஷித் வழிகாட்டுதலில் சிறப்பாக அனைத்தும் வழங்கப்பட உள்ளது. பல்வேறு நாடுகளின் கலாசார பரிமாற்றங்கள் மூலம் தேசம் நீண்ட கால வரலாற்றில் இடம்பெற உள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com