

வாஷிங்டன்,
சீனா, பசிபிக் பெருங்கடலில் அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது.இதுதொடர்பாக அமெரிக்கா தனது கருத்தைத் தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் டாமி பிகோட் கூறியதாவது:-தெற்கு பசிபிக் பெருங்கடலில் விழுந்த, ஆயுதம் ஏந்தாத கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து சீனா சோதனை செய்ததை அமெரிக்கா கண்காணித்தது.ஐ.நா. பாதுகாப்பு சபையின் 5 நிரந்தர உறுப்பினர்கள் மேற்கொண்ட உறுதிப்பாடுகளுக்கு இணங்க, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் விண்வெளி ஏவுதல்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்குமாறு சீனாவை வலியுறுத்துகிறோம்.
மேலும், அர்த்தமுள்ள ஆயுதக் கட்டுப்பாட்டு விவாதங்களில் ஈடுபடுமாறும் கேட்டுக்கொள்கிறோம். அணு ஆயுதப் பரவலைத் தடுக்க அமெரிக்கா முன்னெப்போதையும் விட தீவிரமாகப் பணியாற்றி வரும் வேளையில், சீனா அதற்கு நேர்மாறான செயலில் ஈடுபட்டு வருகிறது.சீனாவின் விரைவான மற்றும் வெளிப்படைத்தன்மையற்ற அணு ஆயுதக் குவிப்பு நடவடிக்கை இப்பகுதிக்கும் உலகிற்கும் பெரும் கவலையளிப்பதாக உள்ளது.எங்கள் நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுக்கான பாதுகாப்பு உறுதிப்பாடுகளில் உறுதியாக இருக்கிறோம் என்றார்.