பயங்கரவாத வீடியோக்கள்; 2 ஆண்டுகளுக்கு முன்பே ஓமனால் ஓரங்கட்டப்பட்டவர்.. விமானியின் அதிர்ச்சி பின்னணி

தொடர் விசாரணையில், அவர் ஹமாம் அல்-ஹம்மாமி என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
விமானி
Published on: 

வாஷிங்டன் டி.சி.

விமான தகர்ப்பு முயற்சி விவகாரத்தில், தொடர்புடைய விமானி 2 ஆண்டுகளுக்கு முன்பே ஓமனால் ஓரங்கட்டப்பட்டவர் என்ற அதிர்ச்சி பின்னணி தெரிய வந்துள்ளது.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் துபாயை சுற்றி பார்ப்பதற்காக சென்றனர். அதனை முடித்துக்கொண்டு அவர்கள் தாயகம் திரும்புவதற்காக எமிரேட்ஸ் ஏர்லைன்சின் பிளைதுபாய் என்ற விமானத்தில் புறப்பட்டனர். இதற்காக, துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்ரேல் நாட்டின் தலைநகர் டெல் அவிவில் உள்ள பென்குரியன் சர்வதேச விமான நிலையம் நோக்கி, அந்த போயிங் ரக விமானம் கடந்த புதன்கிழமை புறப்பட்டது.

விமானத்தில் 27 குழந்தைகள் உள்பட 174 இஸ்ரேலிய பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் என மொத்தம் 180-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்தியாவை சேர்ந்த தலைமை கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் அவருக்கு உதவியாக ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி ஒருவருடன் விமானம் புறப்பட்டது.

எதிர்பாராத பயங்கரம்

விமானம் புறப்பட்ட இரண்டரை மணி நேரத்தில் சவுதி அரேபியா எல்லையை கடந்து, ஜோர்டான் வான்பரப்பில் 33 ஆயிரம் அடி உயரத்தில் அதிவேகத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது, விமானிகள் அறையான காக்பிட்டில் யாரும் எதிர்பாராத பயங்கர சம்பவம் நடந்தது.

ஓமன் நாட்டை சேர்ந்த துணை விமானி, திடீரென எழுந்து, மறைத்து வைத்திருந்த சிறு கத்தியை எடுத்து, தலைமை விமானியான கேப்டன் ஸ்மித் மச்சாரை கடுமையாக தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த கேப்டனிடமிருந்து விமானத்தின் கட்டுப்பாட்டை பறித்த அந்த கொடூர துணை விமானி, தற்கொலை தாக்குதல் நடத்தி ஒட்டுமொத்த பயணிகளையும் கொல்ல சதி செய்தார்.

அலறிய பயணிகள்

விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்யும் திட்டத்துடன், வெறும் 30 விநாடிகளிலேயே 14 ஆயிரம் அடிக்கு செங்குத்தாக கீழ்நோக்கி இயக்கினார். இதனால், விமானத்தின் உள்ளே இருந்த 170 இஸ்ரேலிய பயணிகளும் மரண பயத்தில் அலறினர். காக்பிட் அறைக்குள் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விமான பணிப்பெண்களும் அலறினர்.

காயமடைந்த நிலையிலும் கேப்டன் ஸ்மித் மச்சர், விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர துணை விமானியுடன் கடுமையாக போராடினார். அதே நேரத்தில் விமானத்தில் இருந்து ஆபத்து சிக்னலும் அனுப்பப்பட்டது. அப்போது விமானத்தில் இருந்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் சக விமானிகள் உஷாரானார்கள்.

துணை விமானி கைது

அப்போது கேப்டன் காக்பிட் கதவை திறக்க, உடனடியாக அவர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கி பிடித்து கயிற்றால் கட்டினர். பின்னர் விமானம் சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் அவசரமாக பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இந்திய விமானி மச்சார் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஓமனை சேர்ந்த துணை விமானி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக துணை விமானியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதுபற்றி இஸ்ரேல் நாட்டின் ஊடகம் வெளியிட்ட செய்தியில், துணை விமானிக்கு அல் கொய்தா இயக்கத்தின் கொள்கைகள் வலிந்து திணிக்கப்பட்டு உள்ளன.

அவரை இயக்கத்தின் பக்கம் இழுப்பதற்கான வேலைகள் நடந்துள்ளன. இதன் ஒரு பகுதியாக மத தலைவர்களுடன் பல கூட்டங்கள் நடந்துள்ளன என தெரிவித்து உள்ளது.

பறக்க தடை

அவருக்கு பயங்கரவாதம் தொடர்பான பார்வைகள் இருந்துள்ளன. இதனால், இதற்கு முன்பு விமானத்தில் பறக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சிரியாவில் அவர் முன்பு தங்கியிருந்தபோது இந்த விவரம் பரவலாக தெரிய வந்துள்ளது. ஓமனுக்கு பதிலாக சிரியாவிலேயே பல நாட்கள் தங்கியிருந்து பயங்கரவாதிகளுடனான தொடர்பை வளர்த்து வந்திருக்கிறார். அவர்களின் கட்டுப்பாட்டிலேயே வளர்ந்த அவர், அதன் தாக்கத்திற்கு ஆளாகியுள்ள விவரம் தெரிய வந்துள்ளது.

தொடர் விசாரணையில், அவர் ஹமாம் அல்-ஹம்மாமி என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவரை பற்றி அடுத்தடுத்து, அதிர்ச்சியூட்டும் விவரங்கள் வெளிவந்துள்ளன.

விமானி பயிற்சி

2 ஆண்டுகளுக்கு முன்னர், ஓமனில் விமானி பயிற்சியை பெற்ற, தொடக்க காலத்தில் அவருடைய செயல்பாடுகள் சந்தேகத்திற்குரிய வகையில் இருந்துள்ளன. இணையதளங்களில் பயங்கரவாதம் தொடர்பான தகவல்களை தேடி, படித்து வந்திருக்கிறார்.

தொடர்ந்து அவரை கண்காணித்தது ஓமன் அரசு. இதன்பின்னர் ஓமன் ஏர் நிறுவனம் அவரை விமானிக்கான பணியில் இருந்து மாற்றி, அலுவலகத்தில் பணியமர்த்தியது. ஆனால், அந்த வேலையில் தொடர்ந்து அவர் நீடிக்கவில்லை. அலுவலக வேலை என்றதும் அவர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். 2024-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்துள்ளது.

வீடியோ வெளியீடு

ஒரு முறை துபாயில் உள்ள எல் அல் இஸ்ரேலிய ஏர்லைன்ஸ் விமானத்தின் வீடியோ ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அதில், 2022-ம் ஆண்டு நடந்த அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட அல்-கொய்தாவின் முக்கிய தலைவர் அய்மன் அல்-ஜவஹிரியின் புகைப்படத்துடன் வீடியோ முடிந்திருந்தது.

இதுபோன்ற தகவல்களை முறையாக விசாரிக்காமல், பிளைதுபாய் நிறுவனம் எப்படி அவரை வேலையில் சேர்த்துள்ளது? என்ற விவரங்கள் எதுவும் தெரிய வரவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com