தாய்லாந்து குகை மீட்பு பணிகளில் ஈடுபட்ட கடற்படை வீரர் ஓராண்டு கால சிகிச்சைக்குப்பின் உயிரிழப்பு

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளரை மீட்கும் பணிகளின் போது நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அந்நாட்டு கடற்படையின் நீர்மூழ்கி வீரர், ஓராண்டு கால சிகிச்சைக்கு பின்னர் உயிரிழந்தார்.
தாய்லாந்து குகை மீட்பு பணிகளில் ஈடுபட்ட கடற்படை வீரர் ஓராண்டு கால சிகிச்சைக்குப்பின் உயிரிழப்பு
Published on

பாங்காக்,

தாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாணத்தில் மியான்மர் எல்லையில் தாம் லுவாங் என்ற குகை உள்ளது. சுமார் 10 கி.மீட்டர் நீளமுடைய இந்த குகை ஆசியாவிலேயே மிகப்பெரிய குகையாகும். வைல்டு போர் என்ற கால்பந்தாட்ட அணியைச் சேர்ந்த 11 வயது முதல் 16 வயது கொண்ட சிறுவர்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி இந்தக் குகைக்கு சென்றனர்.

இந்த சிறுவர்களுக்கு உதவியாக துணைப் பயிற்சியாளர் எக்காபோல் சந்தாவாங் உடன் சென்றார். இவர்கள் சென்ற நேரம் அங்கு திடீரென்று கடுமையான மழை பெய்ததால், தண்ணீர் குகைக்குள் புகுந்தது. இதனால் அவர்கள் தண்ணீருக்குள் மாட்டிக் கொண்டனர்.

இதையடுத்து தாய்லாந்து கடற்படை வீரர்கள், பேரிடர் மீட்புப் படையினர், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மீட்பு குழுவினர் அவர்களை பத்திரமாக மீட்டனர். இரண்டு வாரங்கள் உணவின்றி உள்ளே தவித்த அவர்களை பத்திரமாக உயிருடன் மீட்டதால், உலகெங்கிலும் இதற்கு பாராட்டு கிடைத்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து 17 மாதங்கள் கடந்த நிலையில், இந்த சிறுவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கு முக்கிய காரணமான, ஹீரோ என்று கூறப்பட்ட தாய்லாந்து கடற்படை வீரர் பேரூட் பக்பாரா ரத்தத்தில் ஏற்பட்ட தொற்று நோய் காரணமாக இறந்துவிட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த ஓராண்டாக சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு குகைக்குள் சிக்கிய சிறுவர்களை காப்பாற்றும் முயற்சியில் செயல்பட்ட போது நீர் மூழ்கி வீரர் சார்ஜென்ட் சமன் குமன் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது மற்றொரு நீர்மூழ்கி வீரரான பேரூட் பக்பாரா தொற்றுநோய் காரணமாக நீண்ட நாட்களாக போராடி வந்த நிலையில் உயிரிழந்து விட்டார் என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com