ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது

ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் 3,428 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது.
தெஹ்ரான்,
ஈரான் நாட்டில் அயோதுல்லா அலி காமேனி தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம், அதன் தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை உள்ளிட்டவற்றால் அதிருப்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய மக்களின் போராட்டம், ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 19-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க பாதுகாப்பு படையினரை அரசு இறக்கி விட்டு உள்ளது. இதன்படி போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 3,428 பேர் பலியாகி உள்ளனர் என நார்வே நாட்டை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்து உள்ளது. அவர்கள் ஈரான் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டவர்கள் என்றும் தெரிவித்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.






