ஹார்மூஸ் ஜலசந்தியில் இந்திய கொடியுடன் கூடிய 2 சரக்கு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி

ஹார்மூஸ் ஜலசந்தி வழியே இந்தியாவுக்கான கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வழியை ஈரான் வழங்கும் என ஈரான் தூதர் கூறினார்.

ஹார்மூஸ் ஜலசந்தியில் இந்திய கொடியுடன் கூடிய 2 சரக்கு கப்பல்களுக்கு ஈரான் அனுமதி
Published on

தெஹ்ரான்

மேற்காசிய போரின் ஒரு பகுதியாக ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இதனால், கப்பல்களில் பணியாற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஊழியர்கள் தாக்கப்படும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

ஈரானை ஒட்டியுள்ள பெர்சியன் வளைகுடா பகுதியில், இந்திய கொடியுடன் கூடிய 28 கப்பல்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. அவற்றில் 24 கப்பல்கள் ஈரானின், ஹார்மூஸ் ஜலசந்திக்கு மேற்கே உள்ளன. அதில், 677 இந்திய பணியாளர்கள் உள்ளனர். இதேபோன்று 4 கப்பல்கள் ஹார்மூஸ் ஜலசந்திக்கு கிழக்கே நிறுத்தப்பட்டு உள்ளன. அதில், 101 இந்திய பணியாளர்கள் உள்ளனர் என தெரிய வந்துள்ளது. கடந்த 3 நாட்களாக இதே நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில், ஹார்மூஸ் ஜலசந்தியில் கியாஸ் சிலிண்டர் ஏற்றி வந்த, இந்திய கொடியுடன் கூடிய 2 கப்பல்களுக்கு ஈரான் அனுமதி அளித்துள்ளது. அவற்றில் ஷிவாலிக் என்ற பெயரிடப்பட்ட கப்பல், ஓமன் வளைகுடா பகுதியில் இருக்கின்ற விவரம் கடல்சார் போக்குவரத்து கண்காணிப்பு தளத்தில் உள்ள விவரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது. இந்த கப்பல், வருகிற 21-ந்தேதி சேர வேண்டிய இடத்திற்கு சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன் இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பதாலி பேசும்போது, ஈரான் மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே நீண்டகால நட்பு மற்றும் பகிரப்பட்ட நலன்கள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு, மேற்காசிய மோதலின்போதும், ஹார்மூஸ் ஜலசந்தி வழியே இந்தியாவுக்கான கப்பல்கள் பாதுகாப்பாக செல்வதற்கான வழியை ஈரான் வழங்கும் என உறுதிப்படுத்தினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com