

தெஹ்ரான்,
வளைகுடா நாட்டில் ஈரான்-அமெரிக்கா இடையேயான போரில் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தற்காலிக சண்டை நிறுத்தம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாகிஸ்தான், ஓமன் உள்ளிட்ட மத்தியஸ்த நாடுகளுடன் இணைந்து இருதரப்பும் நிரந்தர அமைதி ஒப்பந்தத்தை மேற்கொள்ள தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
இருநாடுகள் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் திடீரென ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. தற்காப்பு நடவடிக்கை என்று கூறி ஈரானின் ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா குண்டுகளை வீசியது.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஈரான், போர் நிறுத்தத்தை அமெரிக்கா மீறிவிட்டதாக குற்றம் சாட்டியது. மறுபுறம் லெபனான் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹார்முஸ் நீரிணையை கைப்பற்றிய அமெரிக்கா போர்க்கப்பல்கள் ஈரான் துறைமுகத்துக்கு செல்லவிருந்த சரக்கு கப்பல் மீது தாக்குதல் நடத்தின.
போட்ஸ்வானா நாட்டின் கொடியுடன் ஈரானின் கார்க் தீவுக்கு எண்ணெய் ஏற்றி செல்ல வந்த அந்த கப்பல் மீது அமெரிக்கா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது.
அமெரிக்காவின் இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ஈரான் இறங்கியது. குவைத், பக்ரைனில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஏவுகணைகள், டிரோன்களை ஏவியது. இதனால் போர்ப்பதற்றம் மேலும் அதிகரித்தது.
பக்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் 5-வது படைப்பிரிவின் தலைமையகத்தையும், அப்பகுதியில் உள்ள ஒரு விமானதளத்தையும் தாக்கியதாக ஈரானின் புரட்சிகர காவல்படை அறிவித்தது. மேலும் குவைத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசியும், டிரோன்களை செலுத்தியும் தாக்குதல் நடத்தியது.
குறிப்பாக அந்த நாட்டில் அமைந்துள்ள அமெரிக்க படைத்தளம், சர்வதேச விமானநிலையம் மீது குறிவைக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களை அமெரிக்கா ராணுவம் வானில் இடைமறித்து வெற்றிகரமாக தகர்த்தன.
இதற்கிடையே குவைத் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் அந்த நாட்டின் விமான நிலையத்தின் மேற்கூரை கடும் சேதமடைந்தது. மேற்கூரையின் சிமெண்டு பூச்சுகள், கட்டிட இடிபாடுகள் ஆகியவை தரையில் விழுந்தன. இதனால் விமான நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓட்டம் பிடித்தனர்.
கட்டிட இடிபாடுகளில் சிக்கி அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 63 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை அந்த நாட்டின் பாதுகாப்பு மந்திரி ஷேக் அப்துல்லா நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இதற்கு பதிலடியாக ஈரானின் கெஷ்ம் தீவை குறிவைத்து அமெரிக்கா ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது. ஹார்முஸ் நீரிணை அருகே உள்ள இந்த தீவில் ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாட்டு நிலையத்தின் மீது அமெரிக்கா மத்திய கட்டளை தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தது. இதனிடையே ஆக்கிரமிக்க நினைப்பவர்களின் தலைமையகங்களை சாம்பலாக்க தயங்க மாட்டோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானின் இறையாண்மையை மீண்டும் உரசிப் பார்க்க முயன்றால் எங்கள் அடுத்தக்கட்ட பதிலடி அனைத்து சட்டங்கள், எல்லைகளைக் கடந்து மிகவும் மோசமானதாக இருக்கும். எங்கள் பகுதியை ஆக்கிரமிக்க நினைப்பவர்கள், அதற்கு உதவுபவர்களின் தலைமையகங்களை சாம்பலாக்கவும் எங்களது படைகள் தயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குவைத் சர்வதேச விமானநிலையத்தின் பயணிகள் முனையத்தை தாக்கியதை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) மறுத்துள்ளதுடன், இந்த சேதமானது ஈரானியத் தாக்குதலால் ஏற்படவில்லை என்றும், மாறாகக் கோளாறடைந்த அமெரிக்க பேட்ரியாட் வான் பாதுகாப்பு இடைமறிப்பு ஏவுகணையாலேயே ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
இதனிடையே ஈரானின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்க ராணுவம் உடனடியாக நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) ஈரானின் கூற்றை "முற்றிலும் பொய்யானது" என்று நிராகரித்ததுடன், ஈரான் வேண்டுமென்றே பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைத்ததாகக் குற்றம் சாட்டி உள்ளது.