பூமிக்கு அடியில் மேலும் ஒரு அணு உலையை கட்டுகிறது ஈரான் - செயற்கைகோள் படம் மூலம் அம்பலம்

அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் பூமிக்கு அடியில் மேலும் ஒரு அணு உலையை அமைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பூமிக்கு அடியில் மேலும் ஒரு அணு உலையை கட்டுகிறது ஈரான் - செயற்கைகோள் படம் மூலம் அம்பலம்
Published on

டெஹ்ரான்,

அமெரிக்கா உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டில் கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியது. அதன் பின்னர் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது. இதற்கு பதிலடியாக அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள முக்கிய நிபந்தனைகளை ஈரான் படிப்படியாக புறக்கணித்தது.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் நீடிக்கிறது. அதேசமயம் அமெரிக்காவுடனான பதற்றத்துக்கு மத்தியில் ஈரான் அணு ஆயுத திட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக ஐ.நா. கண்காணிப்பாளர்கள் கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஈரான் பூமிக்கு அடியில் மேலும் ஒரு அணு உலையை அமைப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. குவாம் மாகாணத்தின் போர்டோ நகரில் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை காட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. எனினும் போர்டோ நகரில் அணு உலை கட்டப்படுவதை ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை.

அதேபோல் ஈரானின் அணு திட்டங்களை கண்காணித்து வரும் ஐ.நா. கண்காணிப்பாளர்களும் இதுகுறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. வருகிற ஜனவரி 20-ந்தேதி அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கவுள்ள நிலையில், ஈரானின் புதிய அணு உலை குறித்த செய்தி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com