

தெஹ்ரான்,
ஈரான் சரக்கு கப்பல் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் மாலுமி உயிரிழந்தார்.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியது. மேலும், ஹர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால், கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.
இதையடுத்து, இரு தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. இதன் காரணமாக சில நாட்கள் மத்திய கிழக்கில் சற்று அமைதியான சூழ்நிலை நிலவி வந்தது.
ஆனால், ஈரான் , அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதன்படி, கடந்த மாதம் இறுதியில் இருந்து இரு நாடுகளும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக ஹர்மூஸ் ஜலசந்தி பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது ஈரானும், அமெரிக்காவும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், ஹர்மூஸ் ஜலசந்தி பகுதி வழியாக சென்ற ஈரான் சரக்கு கப்பல் மீது இன்று ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த ஏவுகணை தாக்குதலில் ஈரான் மாலுமி உயிரிழந்தார். மேலும், 4 மாலுமிகள் படுகாயமடைந்தனர்.
ஈரானின் குவாசம் தீவு அருகே ஹர்மூஸ் ஜலசந்தியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக, ஜோர்டான் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணை தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.