வியன்னா பேச்சுவார்த்தைக்கு முன்பாக போர் பயிற்சியை தொடங்கிய ஈரான்...!

வியன்னா பேச்சுவார்த்தைக்கு முன்பாக ஈரான் தனது போர் பயிற்சியை தொடங்கியது.
வியன்னா பேச்சுவார்த்தைக்கு முன்பாக போர் பயிற்சியை தொடங்கிய ஈரான்...!
Published on

டெக்ரான்,

ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு விலகியது. அத்துடன் ஈரான் மீது மறுபடியும் பொருளாதாரத்தடைகளை விதித்தது. இதையடுத்து ஈரானும் தன் பங்குக்கு படிப்படியாகவும், பகிரங்கமாகவும் தனது அணுசக்தி ஒப்பந்த வரம்புகளை கைவிட்டது.

ஈரானின் 20 சதவீத செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பு 210 கிலோவரை எட்டியுள்ளதாக தெரிய வந்துள்ளது. ஒப்பந்தப்படி 3.67 சதவீதத்துக்கு மேல் யுரேனியம் செறிவூட்ட முடியாது. இதற்கிடையே பல மாத இழுபறிகளுக்கு பின்னர் ஈரானும், ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் மீண்டும் அணு ஆயுத தவிர்ப்பு தொடர்பாக வியன்னாவில் வரும் 29-ந் தேதி நேரடி பேச்சு வார்த்தையை தொடங்க உள்ளன.

இந்த நிலையில், ஈரான் தனது வருடாந்திர போர் பயிற்சியை ஓமன் வளைகுடாவின் கடலோரப்பகுதியில் ஹார்முஸ் ஜலசந்தியின் கிழக்கே 10 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள இடத்தில் தொடங்கி உள்ளதாக நேற்று அந்த நாட்டின் அரசு டெலிவிஷன் கூறியது.

இதில் கடற்படை, விமானப்படை, ராணுவம் என முப்படைகளும் கலந்து கொண்டுள்ளன. போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ராணுவ போக்குவரத்து விமானம், நீர்மூழ்கிக்கப்பல்கள், டிரோன்கள் இதில் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த போர் பயிற்சி எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com