உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? கனடா, அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு

விபத்துக்குள்ளானதாக கூறப்படும் உக்ரைன் விமானம் ஈரானால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா, கனடா சந்தேகம் எழுப்பியுள்ளன.
உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா? கனடா, அமெரிக்கா குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு
Published on

ஒட்டவா,

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகளுடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 82 ஈரானியர்கள், 63 கனடா நாட்டைச்சேர்ந்தவர்கள், உக்ரைன் நாட்டைச்சேர்ந்த 11 பேர் என மொத்தம் 176 பேரும் பலியாகினர்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இந்த விபத்து நடந்துள்ளது. எனவே விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன. உலகளாவிய விமான போக்குவரத்துத்துறை விதிகளின் கீழ், இந்த விபத்து குறித்து விசாரணையை வழிநடத்த ஈரானுக்கு உரிமை உண்டு. அந்த அடிப்படையில் தனி விசாரணை குழுவை அமைத்து ஈரான் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகிறது.

பொதுவாக இதுபோன்ற விசாரணைகளில் அந்த விமானத்தை தயாரித்த நிறுவனமும், விமானத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டியில் உள்ள தகவல்களை ஆய்வு செய்யும் திறன் பெற்ற சில நாடுகளும் ஈடுபடுவது வழக்கமானது. ஆனால், விபத்துக்குள்ளான உக்ரைன் விமானத்தில் இருந்து மீட்கப்பட்ட கருப்பு பெட்டியை அதன் உற்பத்தியாளரான அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்க அரசிடமோ ஒப்படைக்க மாட்டோம் என்று ஈரான் அறிவித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும், உக்ரைன் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தங்களுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அதேபோல், அமெரிக்காவும் இதே சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஈரான், எதிர்பாராத விதமாக விமானத்தை சுட்டுவீழ்த்தியிருக்கலாம் என்று அமெரிக்கா அதிகாரிகள் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.

ஈரான் மறுப்பு

ஆனால், கனடா மற்றும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளான அதே சமயத்தில், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் பல, அதே வான்பரப்பில் பறந்ததாகவும் கூறியுள்ளது. கனடா தன்னிடம் உள்ள உளவுத்தகவல்களை அளித்து விமான விபத்து குறித்த விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று ஈரான் கேட்டுக்கொண்டதாக மேற்கத்திய ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com