அமெரிக்க படை வீரர்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது ஈரான்!

ராணுவ தளபதி சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க படையினரை பயங்கரவாதிகளாக அறிவித்து ஈரான் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க படை வீரர்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது ஈரான்!
Published on

தெஹ்ரான்,

ஈரானுடன் அமெரிக்கா தொடர்ந்து விரோதப்போக்கை கடைப்பிடித்து வருகிறது. இந்த நிலையில் ஈராக் தலைநகர் பாக்தாத் வந்திருந்த இடத்தில், ஈரான் படைத்தலைவர் காசிம் சுலைமானியை (வயது 62) அமெரிக்கா அதிரடியாக வான்தாக்குதல் நடத்தி கொன்றது உலக அரங்கை அதிர வைத்துள்ளது. இதனால், அமெரிக்கா, ஈரான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தினால், இதுவரை இல்லாத அளவுக்கு மிக கடுமையான தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடியாக அமெரிக்க படை வீரர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக ஈரான் அறிவித்து அதிரடி காட்டியுள்ளது. ஈரான் பாராளுமன்றத்தில், இது தொடர்பாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைக்கு ரூ.576 கோடி பரிசுத்தொகை அறிவிப்பதாக ஈரான் மூத்த அதிகாரி கூறியதாக ஈரான் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கிடையே, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அமெரிக்க விசா வழங்க மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாடுகளில் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முகமத் ஜாவத் சாரிபுக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com