

தெஹ்ரான்,
அணு ஆயுத தடை ஒப்பந்தத்திற்கு ஈரான் மறுப்பு தெரிவித்ததால், அந்த நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போர் தொடங்கி 25 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்கி வருகிறது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியுள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியில்லை என்று ஈரான் கூறியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வர 15 அம்ச திட்டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாயின. ஆனால், இதனை ஏற்க மறுத்த ஈரான் தாக்குதலை நீடித்து வருவதாக தெரிகிறது.
இதற்கிடையே, முக்கிய திருப்பமாக ஹார்முஸ் ஜலசந்தியில் நட்பு நாடுகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது. இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான், சீனா மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து செல்ல அனுமதி அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஈரான் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அர்காசி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி முற்றிலும் மூடப்படவில்லை என்றும், ஈரானின் நட்பு நாடுகளுக்கு இந்த ஜலசந்தியை கடக்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் கூறினார்.