காதலால் மகள் கர்ப்பம்; ஆத்திரத்தில் பெற்றோர் செய்த வெறிச்செயல்

சம்பவத்தை ஆணவக் கொலை என ஹெங்காவ் மற்றும் ஹானா ஆகிய மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
 ஆத்திரத்தில் பெற்றோர் செய்த வெறிச்செயல்
Published on: 

தெக்ரான்,

மேற்கு ஈரானிய நகரமான சனந்தாஜ் பகுதியை சேர்ந்தவர் ஹெலியா பத்தாஹி (வயது 19). இளைஞர் ஒருவரை காதலித்து வந்த இவர் 2 மாத கர்ப்பமானார்.

தனது வயிற்றில் வளரும் சிசு குறித்த தகவலை கடந்த வாரம் ஹெலியா பத்தாஹி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார்.

இதனை கேட்டு கடும் ஆத்திரமடைந்த அவரது பெற்றோர் வோரியா பத்தாஹி, லைலா வெய்ஸ் ஆகியோர், மகள் மீது புகார் அளிக்க கடந்த 21ந்தேதி (சனிக்கிழமை) நீதிமன்றத்திற்கு சென்றனர்.

அங்கிருந்து வீடு திரும்பியதும், பெற்றோர் மகளை சரமாரியாக தாக்கினர். மேலும் சுமார் 30 வலிப்பு எதிர்ப்பு மாத்திரைகளை வலுக்கட்டாயமாக விழுங்க வைத்து அவரை கொல்ல முயன்றனர்.

மாத்திரைகளை விழுங்கிய பிறகும் மகள் உயிருடன் இருப்பதை உணர்ந்த பெற்றோர், சிறிதும் இரக்கமின்றி தலையணையால் முகத்தை அமுக்கி மூச்சுத்திணறடித்து கொடூரமாக கொலை செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெற்றோர் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் மகளை கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இந்த கொடூர சம்பவத்தை ஆணவக் கொலை என ஹெங்காவ் மற்றும் ஹானா ஆகிய மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

ஹெலியா பத்தாஹியின் மரணம் ஈரானில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகள் குறித்த விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளது. அங்கு ஒரு வார காலத்தில் இளம் பெண் கொல்லப்படும் 3வது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த 18ந் தேதி (புதன்கிழமை) கிலான் மாகாணத்தில் நடந்த பிறந்தநாள் விழாவில், திருமணம் செய்ய மறுத்த ஆத்திரத்தில் 23 வயதான சதாப் ஹக்பின் தனது முன்னாள் காதலனால் சுட்டு கொல்லப்பட்டார்.

அதற்கு முன்பு கெர்மான் ஷாவில் 16 வயது பள்ளி மாணவி சோகந்த் சயாதி கட்டிடத்தின் 5வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்தார். தந்தையுடன் வீட்டிற்கு அனுப்பினால் அவர் தன்னை கொன்று விடுவார் என அந்த மாணவி பள்ளி ஊழியர்களிடம் முன்கூட்டியே எச்சரித்திருந்ததாக ஆசிரியர் சங்க கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

X