இஸ்ரேல் மீது விரைவில் ஈரான் தாக்குதல் நடத்த கூடும்; அமெரிக்கா கணிப்பு

இஸ்ரேலுக்கு ஆதரவை வழங்குவோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு நாங்கள் உதவுவோம். ஈரான் வெற்றி பெறாது என்று பைடன் கூறியுள்ளார்.
இஸ்ரேல் மீது விரைவில் ஈரான் தாக்குதல் நடத்த கூடும்; அமெரிக்கா கணிப்பு
Published on

வாஷிங்டன்,

சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் நகரில் இருந்த ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், ஈரானின் 3 முக்கிய அதிகாரிகள் மரணமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு உள்ளது.

இதுபற்றி அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் வெள்ளை மாளிகையில் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலில், நான் உறுதியான தகவலுக்குள் போக விரும்பவில்லை. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் காலதாமதமின்றி விரைவில் தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்கிறேன் என கூறியுள்ளார்.

இந்த தருணத்தில் ஈரானுக்கான தன்னுடைய செய்தி, போர் வேண்டாம் என கூறி பைடன் முடித்து கொண்டார். எனினும், பைடனிடம் நிருபர்கள் ஒருசேர கேள்வி எழுப்பினர். அமெரிக்க படைகள் ஆபத்தில் உள்ளனவா? என கேட்டனர்.

அதற்கு திரும்பி வந்து பதிலளித்த பைடன், இஸ்ரேலின் பாதுகாப்புக்காக நாங்கள் அர்ப்பணித்து இருக்கிறோம். இஸ்ரேலுக்கு ஆதரவை வழங்குவோம். இஸ்ரேல் பாதுகாப்புக்கு நாங்கள் உதவுவோம். ஈரான் வெற்றி பெறாது என்று கூறியுள்ளார்.

சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கசில் அமைந்த ஈரான் தூதரகத்தின் மீது, இஸ்ரேல் சில நாட்களுக்கு முன் திடீரென வான்வழி தாக்குதலை நடத்தியது. இந்த சம்பவத்தில் ஈரானின் ஆயுத படைகளில் ஒன்றான இஸ்லாமிய புரட்சி காவல் படையை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர்.

இதில், மூத்த தளபதிகளான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெஜா ஜகேடி மற்றும் மற்றொரு உயரதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ஹதி ஹாஜி ரகீமி உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். இதனை ஈரான் அரசும் உறுதி செய்தது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இதற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானும் உறுதி பூண்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவுக்கு ஈரான் கடிதம் ஒன்றை அனுப்பியது. ஈரான் அதிபரின் அரசியல் விவகாரத்திற்கான பணியாளர் துணை தலைவர் முகமது ஜம்ஷிதி எழுதிய அந்த கடிதத்தில், நெதன்யாகுவின் வலையில் சிக்க வேண்டாம். அதில் இருந்து, அமெரிக்கா விலகி இருக்க வேண்டும். அதனால், நீங்கள் தாக்குதலில் இருந்து தப்புவீர்கள் என தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று ஈரானிடம் அமெரிக்க அரசு கேட்டு கொண்டுள்ளது என்றும் ஜம்ஷிதி கூறினார். எனினும், ஈரான் அனுப்பிய தகவல் பற்றி அமெரிக்கா எதுவும் தெரிவிக்கவில்லை.

இதுபற்றி என்.பி.சி. செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், பெயர் வெளியிடாத இரு அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, பொதுமக்களை விட, இஸ்ரேலுக்குள் ராணுவம் அல்லது நுண்ணறிவு இலக்குகளை நோக்கி எந்த தாக்குதலும் நடத்தப்பட கூடும் என்று அமெரிக்க அதிபர் பைடனின் நிர்வாகம் வருத்தம் கொண்டுள்ளது.

எதிரியான இஸ்ரேலை தாக்குவோம் என ஈரான் தெரிவித்தது. எனினும், எப்போது தாக்குதல் நடத்தப்படும் என்றோ நேரடியாகவா அல்லது லெபனானில் பதுங்கி உள்ள ஹிஜ்புல்லா பயங்கரவாத குழுக்களை கொண்டு தாக்குதல் நடத்துமா? என்ற விவரம் எதுவும் வெளிவரவில்லை என தெரிவித்தனர்.

ஹிஜ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவும், சந்தேகமேயின்றி ஈரான் தாக்குதல் நடத்த தயாராகி வருகிறது. ஆனால், இந்த விசயத்தில் எங்களுடைய குழு தலையிடாது என கூறினார்.

இந்நிலையில், தேசிய பாதுகாப்பு குழுவினரிடம் இருந்து நிலைமையை பற்றி தொடர்ந்து தகவல்களை பெற்று வருகிறேன் என பைடன் கூறினார்.

இதனை முன்னிட்டு, இந்தியா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் அமெரிக்காவும், இஸ்ரேல் நாட்டிலுள்ள அரசு ஊழியர்களுக்கான புதிய பயண வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com